செய்திகள்
திருப்பூரில் வீடு தேடி மருத்துவம் திட்டத்தில் சிகிச்சை பெறும் கலைவாணி.

மக்களை தேடி மருத்துவ திட்டம்-திருப்பூரில் வீடுகளுக்கே சென்று 6,107 பேருக்கு சிகிச்சை

Published On 2021-09-11 09:13 GMT   |   Update On 2021-09-11 09:13 GMT
இத்திட்டத்தில் பயனடைந்த பொதுமக்கள் முதல்-அமைச்சருக்கு நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர்:

இந்தியாவிலேயே முதன் முறையாக மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை மூலம் மக்களைத் தேடி மருத்துவம் என்ற உன்னதமான திட்டத்தை கடந்த மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை அவிநாசி வட்டம் தெக்கலூரில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும்  ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயாளிகளுக்கு பரிசோதனைகளை செய்தல், தேவைப்படும் மருந்துகளை  வழங்குதல், இயன்ற முறை  சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் அத்தியாவசிய மருத்துவ சேவைக்களுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக்குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமுதாய நலப்பதிவேட்டிலும் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. 

இது குறித்து கலெக்டர் டாக்டர்.எஸ்.வினீத் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்தில் ”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் தொடங்கப்பட்டு கடந்த மாதம் 5.8.2021 முதல் 5.9.2021 வரை துலுக்கமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் 1093 நோயாளிகளுக்கும், திருமுருகன்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் 1030 நோயாளிகளுக்கும், சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் 1640 நோயாளிகளுக்கும், நம்பியம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் 1507 நோயாளிகளுக்கும் மற்றும் அவிநாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் 837 நோயாளிகளுக்கும் என மொத்தம் 6,107 நோயாளிகளுக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சை, இயன்முறை மருத்துவம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

இத்திட்டத்தில் பயனடைந்த பொதுமக்கள் முதல்-அமைச்சருக்கு நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News