செய்திகள்
நாராயணசாமி

நம்பர்-1 கட்சி என்று கூறுபவர்களுடன் காங்கிரஸ் கூட்டணி சேராது- நாராயணசாமி ஆவேசம்

Published On 2021-10-06 10:07 GMT   |   Update On 2021-10-06 10:07 GMT
கவர்னர் என்ன சொன்னாலும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலையாட்டி பொம்மை போல் செயல்படுவார் என்று நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த மகளிர் காங்கிரஸ் கொடி அறிமுக நிகழ்ச்சியில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களுக்குதான் இப்போது ரிப்பன் கட் பண்ணும் வேலை நடக்கிறது.

மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் மத்திய அரசு 41 சதவீதம் மானியம் வழங்குகிறது. ஆனால், புதுவைக்கு 20 சதவீத மானியம்தான் கொடுக்கிறது. இதற்காக தான் போராட்டம் நடத்தினோம்.

எங்களுடைய சொந்த பிரச்னைக்காக போராட்டம் நடத்தவில்லை. தேர்தலின்போது ரங்கசாமி கொடுத்த வாக்குறுதியில் மாநில அந்தஸ்து, நிதி கமி‌ஷனில் சேர்ப்பது, 10 ஆயிரம் பேருக்கு வேலை என்று சொன்னது என்ன ஆனது?

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு வார்டு ஒதுக்கீடு மறு ஆய்வு செய்ய உள்ளதால் புதுவையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இப்போது தேர்தல் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுவை அரசே தெரிவித்துள்ளது. இப்படி கூறுவதற்கு ஒரு ஆட்சியா?

ஒரு அரசே தவறு செய்துவிட்டதாக சொல்லலாமா? அப்படி என்றால், என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு ஆள தகுதியில்லை. திறமை இல்லை. நிர்வாகம் தெரியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் மக்களுக்கு ஒன்றும் கிடைக்காது. இதை மகிளா காங்கிரசார் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

நமக்குள் நடக்கும் சண்டையை நிறுத்திவிட்டு, கருத்து வேறுபாடின்றி கட்சியை பலப்படுத்தும் வேலையை பார்க்க வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தல் நமக்கு மிகப்பெரிய பாடம்.

கவர்னர் என்ன சொன்னாலும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலையாட்டி பொம்மை போல் செயல்படுவார். இப்படிப்பட்ட ஒரு ஆட்சிதான் புதுவையில் நடக்கிறது.

புதுவையில் காங்கிரஸ் தான் நம்பர்-1 கட்சி. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. யாராவது நாங்கள் தான் நம்பர்-1 கட்சி என்றால், அந்த கூட்டணிக்கு நாம் செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. வெற்றி, தோல்வி என்பது 2-ம் பட்சம்தான். அதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

எனவே, முதலில் நமக்குள்ளான சண்டையை விடுங்கள். யார் அதிகமாக சண்டை போடுகிறார்களோ, அவர்களை கட்சி தலைவர் சஸ்பெண்டு செய்யும் வேலையை பாருங்கள். அப்போதுதான் எல்லோருக்கும் புத்தி வரும். மகளிர் காங்கிரசார் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிற உள்ளாட்சி தேர்தலை பயன்படுத்தி அதிகமான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

Tags:    

Similar News