ஆன்மிகம்
பெருவுடையாருக்கு அபிஷேகம் நடைபெற்றதை படத்தில் காணலாம்.

பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்

Published On 2019-11-07 05:34 GMT   |   Update On 2019-11-07 05:34 GMT
ராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034-வது ஆண்டு சதயவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் மங்கள இசை, கருத்தரங்கம், பட்டிமன்றம் நடந்தது.

நேற்று காலை 2-வது நாள் நிகழ்ச்சி மங்கள இசையுடன் தொடங்கியது. பின்னர் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு திருவேற்காடு கருமாரிபட்டர் அய்யப்ப சுவாமிகள் சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தஞ்சை பெரியகோவில் கோபுரம் போன்று வடிவமைக்கப்பட்ட தேரில் ஓதுவார்கள் பாடியபடி திருமுறை வீதிஉலா நான்கு ராஜவீதிகளிலும் வலம் வந்து கோவிலை அடைந்தது. யானை மீது தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறைகள வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

அதைத்தொடர்ந்து பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு திரவியப்பொடி, வாசனைப்பொடி, மஞ்சள்பொடி, அரிசிமாவுப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர் உள்ளிட்ட 48 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிற்பகலில் மங்களஇசை, திருமுறை விண்ணப்பம், திருமுறை பண்ணிசை, பரதநாட்டியம் ஆகியவை நடந்தது. மாலையில் தருமபுரம் இளைய ஆதீனம் மாசிலாமணி ஞானசம்பந்த தேசிகசுவாமிகள் முன்னிலையில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
Tags:    

Similar News