செய்திகள்
விஜயகாந்த் - திருமாவளவன்

மேகதாது அணை விவகாரம்: அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - விஜயகாந்த், திருமாவளவன் கோரிக்கை

Published On 2021-06-20 05:43 GMT   |   Update On 2021-06-20 05:43 GMT
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற சூழலில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணைக்கட்டப்படும் என அறிவித்து இருப்பது கண்டனத்திற்குரியது.

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற சூழலில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணைக்கட்டப்படும் என அறிவித்து இருப்பது கண்டனத்திற்குரியது.

எனவே, மேகதாது அணைக்கட்டும் முடிவை கர்நாடகா அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் பணியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவை கலைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று காவிரியில் அணை கட்டுவோம்’ என்று கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேகதாது பிரச்சினை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது இவ்வாறு அவர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


கடந்த மாதத்தில் நாளேடுகளில் இதுதொடர்பான செய்தி வெளியானபோது உடனடியாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானே முன்வந்து இதை வழக்காக எடுத்து மேகதாதுவில் அணைகட்டும் நடவடிக்கைகள் நடக்கிறதா ? என்பதைக் கண்டறியுமாறு குழு ஒன்றை அமைத்தது.

அந்தக் குழுவை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்’ என்று கர்நாடக முதல்-அமைச்சர் எடியூரப்பா ஆணவமாக அறிவித்தார். இப்போது அந்தக் குழுவை பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கலைப்பதாக அறிவித்துள்ளது. மேக தாதுவில் அணைகட்டும் விசயத்தில் கர்நாடகா அரசையே ஒன்றிய பா.ஜ.க. அரசும் ஆதரிக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய தேவை தமிழ்நாட்டுக்கு உள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் காவிரிப்பிரச்சினையில் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும், மேகதாதுவில் அணை கட்டாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆராய்வதற்காகவும் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு முதல்-அமைச்சரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News