செய்திகள்
பதாகையுடன் ஊர்வலமாக வந்த கிராம மக்களை படத்தில் காணலாம்.

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கண்டித்து உண்ணாவிரத முயற்சி: 50-க்கும் மேற்பட்டோர் கைது

Published On 2019-09-30 12:45 GMT   |   Update On 2019-09-30 12:45 GMT
திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கண்டித்து ஆண்கள், பெண்கள் கையில் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சோழங்கநல்லூரில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் கிணறு அமைக்கும் பணி 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியினால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஓ.என்.ஜி.சி நிறுவனம் உடனடியாக ஊரை விட்டு வெளியேற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இதுபற்றி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். வருகிற 4-ந்தேதி வரை உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்ட கோட்டூர் சத்திரம் பஸ் நிறுத்தப்பகுதிக்கு சோழங்கநல்லூர் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக  ஆண்கள், பெண்கள் கையில் பதாகைகளை ஏந்தி வந்தனர்.  

அப்போது திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி.  பழனிச்சாமி, கோட்டூர் இன்ஸ்பெக்ட்டர் அறிவழகன் மற்றும் போலீசார் அவர்களை வழிமறித்து 23 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அப்போது கைது செய்யப்பட்ட கிராம மக்கள் ஓ.என்.ஜி.சி மற்றும் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News