ஆன்மிகம்
பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

பழனி மாரியம்மன் கோவிலில் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி

Published On 2021-02-18 06:46 GMT   |   Update On 2021-02-18 06:46 GMT
பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு லிங்க வடிவில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலிக்கிறார். பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு மாசித்திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கியது.

21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் சாட்டுதல் நேற்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது.

இந்த திருக்கம்பம் சாட்டுவதற்காக சாமி உத்தரவின்பேரில் தேக்கந்தோட்டம் அருகே உள்ள கருப்பணசாமி கோவில் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டது. பின்னர் பழனி வையாபுரிகுளத்துக்கு கம்பம் கொண்டு வரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நான்கு ரதவீதிகளில் கம்பம் சுற்றி வந்து நள்ளிரவு கோவிலை வந்தடைந்தது. பின்பு 1.50 மணிக்கு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து கம்பத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட பின்னர், பால், மஞ்சள்நீரை ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து காத்திருந்தனர்.

திருவிழாவில் வருகிற 23-ந்தேதி கொடியேற்றமும், பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் 2-ந்தேதி திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 3-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

திருவிழா நாட்களில் தினமும் இரவு வெள்ளி யானை, வெள்ளி காமதேனு, தங்ககுதிரை, வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News