உள்ளூர் செய்திகள்
எஸ்எஸ் சிவசங்கர்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று

Published On 2022-01-19 09:56 GMT   |   Update On 2022-01-19 09:56 GMT
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக தொற்று ஏற்பட்டுள்ளது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.எஸ்.சிவசங்கர். அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரான இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

அமைச்சர் ஆன பின்னர் மாநிலம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவருக்கு கடுமையான சளி காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது.

இது தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டபோது தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவரே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் உடல்நிலை பாதிப்பு காரணமாக சோதனை மேற்கொண்டதில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூரில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.


Tags:    

Similar News