இந்தியா
மாநிலங்களவை

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி

Published On 2021-12-06 11:53 GMT   |   Update On 2021-12-06 11:53 GMT
நாகாலாந்து துப்பாக்கி சூடு தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா இரு அவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் 12 மேல்சபை எம்.பி.க்கள் சஸ்பெண்டு விவகாரத்தையும் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடந்த வாரத்தில் எழுப்பி அவையை முடக்கினர்.

இந்த நிலையில் பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று எதிர்க்கட்சிகள் மீண்டும் எம்பிக்கள் சஸ்பெண்டு விவகாரத்தை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். இதேபோல் நாகாலாந்து துப்பாக்கி சூடு தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 



எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த உறுப்பினருமான மல்லிகார்ஜூனே கார்கே எழுந்து நாகாலாந்து விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, இது மிகவும் முக்கியமான பிரச்சினை. பாதுகாப்பு மற்றும் உள்துறை மந்திரியிடம் பேசி உள்ளேன். பிற்பகலில் உள்துறை மந்திரி இது தொடர்பாக விளக்கம் அளிப்பார் என்றார்.

நாகாலாந்து விவகாரம் தொடர்பாக உடனே விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோ‌ஷமிட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. இதனால் அடுத்தடுத்து 4 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் 4 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியில் நாகாலாந்து துப்பாக்கி சூடு தொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷா விளக்கம் அளித்தார். அமித் ஷா விளக்கம் அளித்து முடிந்ததும் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார்.

Tags:    

Similar News