செய்திகள்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி

விவேக் எழுதிய கடிதத்துக்கு இந்திராகாந்தி அனுப்பிய பதில்

Published On 2021-04-18 02:33 GMT   |   Update On 2021-04-18 02:33 GMT
தனது பிறந்த நாள் அன்று, பிரதமருக்கும் பிறந்த நாள் என்பதால் விவேக் ஒரு வாழ்த்து கடிதத்தை இந்திரா காந்திக்கு அப்போது அனுப்பி இருந்தார்.
நடிகர் விவேக் பிறந்தநாள் நவம்பர் 19-ந்தேதி. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளும் நவம்பர் 19-ந் தேதி.

இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்த போது, சிறுவனாக இருந்த விவேக்கின் குடும்பம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்தது.

தனது பிறந்த நாள் அன்று, பிரதமருக்கும் பிறந்த நாள் என்பதால் விவேக் ஒரு வாழ்த்து கடிதத்தை இந்திரா காந்திக்கு அப்போது அனுப்பி இருந்தார்.

அதில் அவர் ஆங்கிலத்தில், ‘மை பெர்த் டே, யுவர் பெர்த்டே சேம்... பெர்த்டே, ஐ விஷ் யூ... யூ விஷ் மீ’ என்று எழுதி இந்திராகாந்திக்கு அனுப்பியுள்ளார்.



அதை படித்து பார்த்த இந்திராகாந்தி, சிறுவனாக இருந்த விவேக்கிற்கு பதில் அனுப்பினார்.

அந்த பதில் கடிதம் தபாலில் வரவில்லை. மாறாக கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதம் என்பதால் கலெக்டரும் தனிப்பட்ட கவனம் எடுத்து, அந்த கடிதத்தை சம்பந்தப்பட்டவரிடம் கொண்டு நேரடியாக சேர்க்கும்படி உத்தரவிட்டார்.

விவேக் வீடு குன்னூர் மலைப்பகுதியில் இருந்ததால் குதிரை ஜவான் அந்த கடிதத்தை கொண்டு சேர்த்தார். விவேக் வீட்டுக்கு அவரைத் தேடி குதிரை ஜவான் வந்ததை அறிந்ததும், உடனே பயந்து அவர் ஆப்பிள் தோட்டத்தில் ஒளிந்து நின்றிருந்தாராம். வெளியே வரவில்லையாம். பின்னர் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்திருப்பது, விவேக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி பிரதமர் இந்திரா காந்தி அனுப்பிய கடிதம் என தெரியவந்ததும், விவேக்கின் தாயார் தேடிச் சென்று விஷயத்தை கூறி வீட்டுக்கு அழைத்து வந்தாராம். 

இந்த தகவலை தந்தி டி.வி. நிகழ்ச்சியில் விவேக் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கடிதத்தை தனது அலுவலகத்தில் பத்திரமாக வைத்து இருப்பதாகவும் அந்த நிகழ்ச்சியில் அவர் கூறி இருக்கிறார்.
Tags:    

Similar News