செய்திகள்
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன்

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய உண்மையை அறிய சீனாவுக்கு தொடர்ந்து அழுத்தம் - அமெரிக்கா திட்டவட்டம்

Published On 2021-06-09 00:55 GMT   |   Update On 2021-06-09 00:55 GMT
கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு சீனாவில் ஆய்வு நடத்தி கடந்த மார்ச் மாதம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.
வாஷிங்டன்:

ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொலைகார கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில்தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் அங்கிருந்து உலக நாடுகளுக்கு இந்த கொடிய வைரஸ் பரவியது.

இதனால் கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றியதாகவும், அங்குள்ள ஆய்வகத்தில் இருந்து இந்த வைரஸ் கசிந்ததாகவும் அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு சீனாவில் ஆய்வு நடத்தி கடந்த மார்ச் மாதம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. ஆனால் இந்த அறிக்கை திருப்திகரமாக இல்லை என அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் விமர்சனம் செய்தன.

எனவே கொரோனா வைரஸ் தோற்றம் மற்றும் பரவல் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவதற்கு உலக நாடுகள் பலவும் அழைப்பு விடுத்துள்ளன.



இந்த விசாரணையில் சீனா பங்கேற்று கொரோனா வைரஸ் குறித்த உண்மையான தகவல்களை வழங்க வேண்டும் என்று உலக நாடுகள் சீனாவை வலியுறுத்தியுள்ளன. ஆனால் சர்வேத விசாரணையில் தாங்கள் பங்கேற்கப்போவதில்லை என சீனா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி வெளிப்படையான தகவல்களை வழங்க சீனாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன்‌ இதுகுறித்து கூறுகையில், “கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா வெளிப்படையாக இருக்கவும், உண்மையான தரவுகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கும் நாங்கள் சர்வதேச சமூகத்துடன் ஒருங்கிணைந்து, தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். சர்வதேச விசாரணையில் நாங்கள் பங்கேற்கப்போவதில்லை என அவர்கள் (சீனா) கூறியதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை” என கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்வதேச விசாரணைக்கு முழு ஆதரவை வழங்கும் அதே வேளையில், இதுபற்றி அமெரிக்கா ஏற்கனவே தனியாக விசாரணையை தொடங்கியுள்ளது” என்றார்.

மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதல் வெளிநாட்டு பயணத்தின் போது வெளிநாட்டு தலைவர்களுடன் அவர் விவாதிக்கும் முக்கிய விவகாரங்களில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர்வதேச விசாரணையும் அடங்கும் என ஜாக் சல்லிவன் தெரிவித்தார்.
Tags:    

Similar News