ஆன்மிகம்
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில்

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் வருகிற 15-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா

Published On 2020-11-11 04:41 GMT   |   Update On 2020-11-11 04:41 GMT
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் வருகிற 15-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. விழாவில் குழந்தைகள்-முதியவர்களுக்கு அனுமதி கிடையாது.
தஞ்சை அருகே திட்டை என்று அழைக்கப்படும் தென்திட்டையில் வசிஷ்டேஸ்வரர்கோவில் உள்ளது. திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற இந்த கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரரர், சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர்.

குருபகவான் ஒரு முழு சுபகிரகம் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் மிக கடுமையான பாவங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தால் காப்பாற்றும் சக்தியாக குருபகவான் விளங்குகிறார். அதனால் தான் குருபார்க்க கோடி நன்மை என்பதும், குருபார்க்க கோடி தோஷம் விலகும் என்பதும் பழமொழிகள் ஆகும். மற்ற எல்லா கோவில்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடப்படுகிறது.

ஆனால் திட்டை கோவிலில் வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு குருபகவான் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆவார்.

அதன்படி இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.48 மணிக்கு குருபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குருப்பெயர்ச்சி விழா முன்னேற்பாடு குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கி பேசியதாவது:-

குருப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கைகளை கழுவிய பிறகு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும்.தற்காலிக முகாமில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவ பணியாளர்கள், சுகாதார அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும். மருத்துவர் குழுவினருடன் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு, கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது.

பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகஅரசு வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது. போதுமான சமூக இடைவெளியில் பக்தர்கள் செல்வதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியை திறம்பட முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலசந்தர், பயிற்சி கலெக்டர் அமித், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பழனி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, திட்டை கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News