செய்திகள்
கோப்புபடம்

வாகனங்களில் வந்தவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை - கோவை மாநகராட்சி அதிரடி

Published On 2021-06-06 11:02 GMT   |   Update On 2021-06-06 11:02 GMT
கோவை உள்பட 11 மாவட்டங்களில் கொரோனா குறையாததால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது கட்டுக்குள் வந்ததால் சில தளர்வுகள் உடன் 14-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவை உள்பட 11 மாவட்டங்களில் கொரோனா குறையாததால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அளவில் கொரோனா தினசரி பாதிப்பில் தொடர்ந்து கோவை முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 663 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 85 ஆயிரத்து 371ஆக உயர்ந்தது.

கொரோனா தொற்று காரணமாக அரசு ஆஸ்பத்திரிகள் தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றவர்கள் இதுவரை இல்லாத அளவில் 4,656 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால், மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 245ஆக உள்ளது. மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 33 ஆயிரத்து 658 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,468ஆக உயர்ந்தது.

இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவையில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சி பல்வேறு இடங்களில் முகாம்களை அமைத்து மாதிரிகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை லாலி ரோடு ஆர்.எஸ் புரம் உழவர் சந்தை பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் தேவையின்றி வருபவர்களை பிடித்து நிறுத்தி அவர்களை கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வைத்தனர்.

இதில் 200-க்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டது. இவ்வாறு கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதால் வேலைக்கு செல்வோர் மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்வர்கள் பாதிக்கப்பட்டனர். 

Tags:    

Similar News