ஆன்மிகம்
ராமன்

ராமபிரானுக்கும் மதுரைக்கும் தொடர்பு

Published On 2020-08-05 04:48 GMT   |   Update On 2020-08-05 04:48 GMT
ராமேசுவரத்தில் சீதை, ராமர், லட்சுமணன், அனுமன் ஆகியோர் சோமசுந்தரரை தரிசனம் செய்து விட்டு அயோத்திக்கு புறப்பட்டு சென்ற பிறகு, ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்ததாகவும், இந்த தகவல் “மாய பசுவை வதைத்த திருவிளையாடல்” புராணத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ராஜா பட்டர் விளக்கம் அளித்தார்.
சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களில் பெரும்பாலானவை மதுரையில்தான் நடந்துள்ளன. அதில் “மாயப்பசுவை வதைத்த படலம்” என்ற திருவிளையாடலும் ஒன்று. அதன் விவரம் வருமாறு:-

முன்பொரு காலத்தில் மதுரையை அனந்த குணபாண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அப்போது, மதம் கொண்ட யானை ஒன்று மதுரை நகரை நோக்கி மிகவும் ஆக்ரோஷமாக வந்தது. இதை பார்த்த மன்னன், இறைவனான சோமசுந்தர பெருமானிடம் முறையிட்டார். உடனே இறைவன் மக்களை காக்க அந்த யானையை தெப்பக்குளத்தில் இருந்து அம்பு எய்து கல்லாக்கினார். அதுதான் தற்போதுள்ள யானை மலை.

மதுரைக்கு அச்சுறுத்தலாக அமைந்த பாம்பையும் இறைவன் அம்பு எய்தி கொன்று, அதனையும் மதுரை அருகே மலையாக்கினார். அதுதான் நாகமலை.

பின்னர் பெரிய பசு ஒன்று ஊருக்குள் புகுந்து பயிரை அழித்தது. இதைக்கண்ட மக்கள் மன்னரிடம் சென்று முறையிட்டனர். உடனே மன்னன் இறைவனிடம் முறையிடுகிறார். அப்போது, இறைவன் தான் பார்த்துக் கொள்வதாக அசரீரியாக கூறினார்.

தன் வாகனமான ரிஷபத்தை அனுப்புகிறார். ரிஷபத்தை கண்டதும் பசு அடங்கி விடுகிறது. பின்னர் அந்த பசுவை மலையாக்குகிறார். அது தான் பசுமலை.

இவ்வாறு இருக்கும் போது ராமர்-லட்சுமணர், சீதையை தேடி வந்தனர். பசுமலையில் வந்து தங்கினர். ராமர் மலையில் இருந்து பார்த்த போது நதி ஒன்று ஓடுவதையும், அங்கு செழிப்புடன் காடுகள் இருப்பதையும் காண்கிறார். அது எந்த இடம்? என்று கேட்டபோது லட்சுமணருக்கு சொல்ல தெரியவில்லை. உடனே ராமர் அகத்தியரிடம் கேட்க, அவர் மதுரையின் பெருமையும், அங்கு வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவிளையாடல்களை பற்றியும் கூறுகிறார்.

உடனே ராமரும், லட்சுமணரும் அகத்தியருடன் கோவிலுக்குள் வந்து பொற்றாமரைகுளத்தில் நீராடி சிவபெருமானை வணங்கி பூஜை செய்கிறார்கள். அப்போது இறைவன், “ராமா நீ கேட்பாயாக. நீ எனக்கு தென்கிழக்கு திசையிலே சென்று, கடலை தாண்டி போ; அங்கு ராவணனுடைய பத்து தலைகளை மறுத்து சீதையின் சிறை நீக்கி மீண்டும் உன்னுடைய அயோத்திக்கு சென்று, பல காலங்கள் உலகை ஆள வேண்டும், ராவணனை கொன்று தம்பி விபீஷணனுக்கு அந்த இலங்கையை கொடு,” என்று கூறுகிறார். இதன் மூலம் சீதையை சிறை எடுத்தவரின் பெயர், நாடு, அங்கு செல்லும் திசையை ராமர் அறிகிறார்.

உடனே மதுரையில் இருந்து தம்பியுடன் புறப்படுகிறார். இதற்கிடையே அனுமனோ, “சீதையிடம் இருந்து பெற்ற கணையாளியை கொண்டு வந்து கொடுத்து, “கண்டேன் சீதையை,” என்கிறார்.

பின்னர் ராமர், இலங்கை சென்று ராணவனை வதம் செய்து விட்டு திரும்புகிறார். வழியில் ராமேசுவரத்தில் சீதை, ராமர், லட்சுமணன், அனுமன் ஆகியோர் சிவபூஜை செய்தனர். அதன்பின்னர் அவர்கள், மதுரை வந்து சோமசுந்தரரை தரிசனம் செய்து விட்டு அயோத்திக்கு புறப்பட்டு சென்ற பிறகு, ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்ததாகவும், இந்த தகவல் “மாய பசுவை வதைத்த திருவிளையாடல்” புராணத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ராஜா பட்டர் விளக்கம் அளித்தார்.
Tags:    

Similar News