செய்திகள்
நத்தம் பகுதி கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

Published On 2019-10-17 12:00 GMT   |   Update On 2019-10-17 12:00 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. பழனியில் 200 பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பழனி:

தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வட்டார வளர்ச்சி அதிகாரிகள் திண்டுக்கல் சாலை, பாலசமுத்திரம் பைபாஸ் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.

குறிப்பாக அங்குள்ள இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பராமரிப்பு கடைகள் ஆகியவற்றில் பழனி வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் தலைமையில் மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகாப், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா ஆகியோர் சோதனை செய்தனர்.

சோதனையின் போது அங்குள்ள தொட்டிகளில் டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளதா, மழைநீர்தேங்கும் வகையில் பொருட்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து அங்குள்ள வாகன பராமரிப்பு கடைகளில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 200 பழைய டயர்களை பறிமுதல் செய்தனர். மேலும் மழைக்காலம் தொடங்க உள்ளதால் திறந்த வெளியில் மழைநீர் தேங்கும் வகையில் பழைய பாத்திரங்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், தேங்காய் ஓடுகள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என கடை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக் குட்பட்ட தேத்தாம்பட்டி, சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மலை விநாயகம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து வீடுகள் தோறும் கொசு ஒழிப்பு மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது.

தொடர்ந்து காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகள்தோறும் உள்ள உபயோகமற்ற பொருட்களில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றுதல், கிருமி நாசினிகள் தெளித்தல்,குடிநீரில் குளோரினேசன் செய்தல்,மேல்நிலைத் தொட்டிகளில் சுத்தம் செய்து தடுப்பு மருந்துகள் கலப்பது, உள்ளிட்ட ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாம்கள் தீவிரமாக நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா, வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமுத்து, சுகாதார மேற்பார்வையாளர் மகா ராஜன், ஊராட்சி செயலர்கள் ராஜேஸ்வரி,சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். இதைப் போலவே நத்தம், உலுப்பகுடி, வத்திபட்டி, கோசுகுறிச்சி, செந்துறை,சிறுகுடி உள்ளிட்ட பகுதிகளிலும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News