செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் - சதிகாரருக்கு 20 ஆண்டு சிறை

Published On 2019-06-15 23:47 GMT   |   Update On 2019-06-15 23:47 GMT
அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டியது தொடர்பாக சதிகாரருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார்.
நியூயார்க்:

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசித்து வந்தவர் முகமது ரபீக் நாஜி. இவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தீவிர ஆதரவாளர். அத்துடன் இவர் ஏமன் நாட்டுக்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேரவும் முயற்சி செய்துள்ளார்.

பின்னர் அமெரிக்கா திரும்பிய இவர், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் நாச வேலைகளில் ஈடுபடுவதற்கு ஆதரவாக செயல்பட்டு, அதற்கான பொருட்களை வினியோகம் செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

இதுகுறித்து உளவுத்தகவல் மூலம் அறிய வந்த அமெரிக்க போலீசார், இவரை கைது செய்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில், பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் 2016-ம் ஆண்டு 86 பேரை கொன்று குவித்த பயங்கரவாத தாக்குதல் போன்று, நியூயார்க் நகரின் டைம் சதுக்கத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொல்ல திட்டம் போட்டது அம்பலத்துக்கு வந்தது.

இவர் மீதான வழக்கை புரூக்ளின் நகர மத்திய கோர்ட்டு விசாரித்தது. விசாரணையில் இவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

இதையடுத்து இவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார். தண்டனை காலம் முடிந்த பின்னரும் 5 ஆண்டு காலம் இவரை கண்காணிப்பில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News