கோவில்கள்
ஸ்தல சயன பெருமாள் கோவில்

கலிகாலத்தில் நேரும் தீமையை நீக்கும் ஸ்தல சயன பெருமாள் கோவில்- மகாபலிபுரம்

Published On 2021-12-10 04:57 GMT   |   Update On 2021-12-10 04:57 GMT
பூதத்தாழ்வார் தனது பாசுரத்தில் இத்தலத்தில் பெருமாள் விரும்பி உறைவதாகக் குறிப்பிடுகிறார். பூதத்தாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாக விளங்குகிறது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில். இங்குதான் பூதத்தாழ்வாரின் திரு அவதாரம் நிகழ்ந்தது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோவிலை எடுத்துக் கட்டினார் என்று வரலாறு கூறுகிறது.

பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்களை கடல் சூழ்ந்து கொண்டது. கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் இன்றும் பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக் கிறார் பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து அருள் பாலிக்கிறார். இத்தல ஸ்தல சயனப் பெருமாள் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபட குருவருளும், திருவருளும் கிட்டும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

இத்தல உற்சவர் திருநாமம் ‘உலகுய்ய நின்றான்’ என்பதாகும். இந்தக் கோவிலை எழுப்பிய மன்னன் பாராங்குசன், பாம்பு புற்றினுள் மறைந்திருந்த இந்த உற்சவரைக் கோவிலில் எழுந்தருள்வித்தான்.

கலிகாலத்தில் நம்மை எல்லாம் காத்து இந்தப் புவியை உய்விக்க வந்தவர் இந்த பெருமாள். இந்த உற்சவரின் கையில் புண்டரீகரின் தாமரை மலர் மொட்டு உள்ளது. அதனை உற்சவர், மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாக ஐதீகம். உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம் இதுதான்.

மாமல்லையில் பெருமாளின் கவுமோதகி என்ற கதாயுதத்தின் அம்சமான பூதத்தாழ்வார் அவதரித்தார். அவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதன்மை ஆழ்வார்கள் எனக் குறிப்பிடப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராகப் போற்றப்பட்டவர். இவர் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். இதில் பெருமாளைப் போற்றும் நூறு வெண்பாக்கள் உள்ளன. பூ என்ற வேர்ச் சொல்லைக் கொண்டு அமைந்தது பூதம் என்ற சொல். இதற்குச் சத்து அறிவு என்று பொருள். பெருமாளின் திருக்குணங்களை அனுபவித்தே இந்தச் சத்து எனும் பூதத்தைப் பெற்றதால், இந்த ஆழ்வார் பூதத்தாழ்வார் ஆனார்.

திருமாலின் கதாயுத அம்சமான பூதத்தாழ்வார் கி.பி. 7ம் நூற்றாண்டில் ஐப்பசி வளர்பிறை நவமியில், அவிட்டம் நட்சத்திரத்தில் கோவில் முன்பு உள்ள பூந்தோட்டத்தில் குருக்கத்தி மலரில் அவதரித்தார். பூதத்தாழ்வார் தனது பாசுரத்தில் இத்தலத்தில் பெருமாள் விரும்பி உறைவதாகக் குறிப்பிடுகிறார். பூதத்தாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

கலியுகத்தின் முடிவில் தான் மேற்கொள்ளப்போகும், கல்கி அவதாரத்தை இந்த ஸ்தல சயனப் பெருமாள் முன்னதாகவே திருமங்கையாழ்வாருக்குக் காண்பிக்க ஆழ்வாரும் ஞானக் கண்ணால் கண்டு, ‘கடும்பரிமேல் கல்கியை நான் கண்டு கொண்டேன், கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தல சயனத்தே’ என்று தனது பாசுரத்தில் அருளியிருக்கிறார். இதன் மூலம் ஸ்தல சயனப்பெருமாளே கல்கி அவதாரம் எடுக்கப்போகிறார் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பூமி பிராட்டியை கடலின் அடியில் சென்று அழுத்திய அசுரனை, வராஹ அவதாரம் எடுத்து மீட்டருளினார் பகவான். வராஹமூர்த்தி யால் மீட்கப்பட்ட பூமிப்பிராட்டி, நிலமங்கை என்ற பெயருடன் இங்கே எழுந்தருளியிருப்பது கூடுதல் சிறப்பாகும். இவர் களோடு, பூமிப் பிராட்டியை தன் வலப்புறம் தாங்கி ‘திருவல எந்தை’யாக, ஞானப் பிரானான வராஹ மூர்த்தியும் இங்கே எழுந்தருளியிருக்கிறார்.

கலிகாலத்தில் நமக்கு வரும் கேடுகளைக் களைய இந்தப் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது. இத்தலத்தில் தனிச் சன்னிதியில் பெருமாளின் இருபுறமும், நிலமங்கைத் தாயாரும், ஆண்டாளும் அருள் பாலிக்கிறார்கள். கோவில் வெளிச்சுற்றில் ஆஞ்சநேயர், ராமர், பூதத்தாழ்வார், கருடன், ஆழ்வார்கள் மற்றும் லட்சுமி நரசிம்மருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

லட்சுமி நரசிம்மரின் சன்னிதியின் எதிரில் உள்ள சுவரில் லட்சுமி நரசிம்மரின் ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி நட்சத்திர தினங்கள், பிரதோஷ காலங்கள், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்திசாயும் மாலை வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து வழிபட்டால் எத்தகைய கடன் தொல்லையானாலும் உடனே அகன்று விடும். வறுமை அகலும்.

அரசன் மல்லேஸ்வரன் நாள்தோறும் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி வந்தான். இதனால் அவன் ஆட்சியை மக்கள் போற்றி வந்தனர். மன்னனிடம் ஒரு கட்டத்தில் இந்த அன்னதானத்தைத் தொடர்ந்து செய்யப் பொருளில்லை. அதனால் அன்னதானம் செய்வதை நிறுத்திவிட்டான். இதனால் மக்கள் பசி பட்டினியில் வாடினர். மன்னனையும் வசைபாடினர். இதனைக் கண்டு அங்கே வந்த முனிவர்கள், அங்கிருந்த குளத்தைக் காட்டி இதோ இந்தக் குளத்து முதலையாக ஆவாய் என்று மன்னனுக்குச் சாபமிட்டார்கள்.

மல்லேஸ்வரன் மீளும் வழி தெரியாமல் குளத்திலேயே முதலையாக இருந்து காலத்தைக் கழித்து வந்தான். அக்குளம் தாமரைக் குளமானதால் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் பூத்திருந்தன. அக்குளம் நோக்கி வந்தார் புண்டரீக மகரிஷி.

பூக்களைக் கண்டார், புளங்காகிதம் அடைந்தார். அதன் கரையில் நின்று பூக் களைப் பறிப்பது எப்படி என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்.

அழகிய அத்தாமரைப் புஷ்பங்களை கண்டதும் பெருமாளுக்கு அளிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். அப்போது நீருக்கு மேல் மூக்கை நீட்டிக் கொண்டு வந்தது, அந்த சாபம் பெற்ற முதலை. ரிஷியைக் கண்டதும் தன் துயரைச் சொல்லி வருந்தியது. சாப விமோசனம் அளிக்கக் கோரியது.

இம்மன்னன் செய்த குற்றத்தினை ஞான திருஷ்டியில் கண்ட ரிஷியும், ஆயிரம் பேர் பசி பட்டினியால் வாடிய பாவத் தினால் இந்த சாபத்தைப் பெற்றதால், அது நீங்க இக்குளத்தில் பூத்துள்ள ஆயிரம் தாமரை மலர்களை பறித்துத் தந்தால் அதனை இங்குள்ள பெருமாளுக்குப் பூஜித்து, சாப விமோசனம் பெற்றுத் தருவதாகக் கூறினார்.

மன்னனும் அவ்வாறே செய்ய, புண்டரீக மகரிஷி பெருமாளுக்குப் பூக்களால் பூஜை செய்தார். அவரது பூஜையில் மனம் மகிழ்ந்த பெருமாள், வரம் கேட்கக் கோரினார். மகரிஷியும் உலக மக்கள் பசி, பட்டினி இன்றி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றும், மன்னன் சாபம் நீங்க வேண்டும் என்றும் வேண்டினார்.

பெருமாளும் அவ்விதமே அருள்பாலித்தார். மன்னனும் தன் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தை மீண்டும் பெற்றான். இக்குளத்திற்கு மகரிஷியின் பெயரையொட்டி, புண்டரீக புஷ்கரணி என்ற பெயரும் ஏற்பட்டது. இக்குளத்தில்தான் ஆண்டுதோறும் ஸ்தல சயனப் பெருமாளுக்குத் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராடினால் ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத்தலமாக இக்கோவில் உள்ளது.

இத்தல ஸ்தல சயனத்தாரையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடுதல் மிகச் சிறப்பானது.
Tags:    

Similar News