செய்திகள்
கொரோனா தடுப்பூசி

100 இடங்களில் தடுப்பூசி திருவிழாவுக்கு ஏற்பாடு

Published On 2021-10-22 02:40 GMT   |   Update On 2021-10-22 02:40 GMT
புதுச்சேரியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருகிற 25-ந்தேதி தடுப்பூசி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க புதுவை அரசு சுகாதாரத்துறை மூலமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 25-ந் தேதி மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது கவர்னரின் அறிவுறுத்தலின்படி ‘நாங்க போட்டுக்கிட்டோம், நீங்க போட்டுக்கிட்டீங்களா’ என்ற கருவுடன் நடைபெறும். நாட்டில் இதுவரை கிட்டத்தட்ட 100 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தற்போதைய நிலவரத்தின்படி தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மட்டுமே நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். மேலும் தீவிர சிகிச்சை பெறும் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே ஆவர்.

புதுச்சேரி மாநிலத்தில் சராசரியாக 70 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசியை எடுத்துள்ளனர். இன்னும் 30 சதவீத நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை. 100 சதவீதம் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் தான் இந்த கொடிய நோயில் இருந்து நாம் மீண்டும் இயல்பு நிலைக்கு செல்ல முடியும்.

அதனால் இந்த தடுப்பூசி திருவிழாவில் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று நம் புதுவை மாநிலத்தை 100 சதவீதம் தடுப்பூசி பெற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். மேலும் வாகன வசதி இல்லாதோரும், முதியோர்களும், தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமாயின் எங்களின் 24 மணிநேர 104 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டால் உங்கள் இல்லம் தேடிவந்து தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் யாருக்கும் இதுவரை ஒவ்வாமை போன்ற எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. வரும் 25-ந்தேதி நடைபெறும் தடுப்பூசி திருவிழாவை பயன்படுத்தி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமில்லாது முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி சோப்புபோட்டு கைகளை சுத்தம் செய்வது போன்ற பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News