செய்திகள்
ரமோன் முனிஸ் பயணித்த கார்

100-க்கும் அதிகமான குண்டுகள் துளைக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி

Published On 2020-12-06 15:47 GMT   |   Update On 2020-12-06 15:47 GMT
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் போலீஸ் அதிகாரி 100-க்கும் அதிகமான முறை துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோவை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன் எல் சாப்போ (வயது 63). மெக்சிகோ நாட்டில் தனியாக ஒரு போதை மருந்து சாம்ராஜியம் நடத்தி வந்த இவர், அமெரிக்காவுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். மெக்சிகோவில் பல முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எல் சாப்போ சிறையில் சுரங்கப்பாதை அமைத்து பலமுறை தப்பிச்சென்றுள்ளார். 

இறுதியாக 2017-ம் ஆண்டு இவர் மீண்டும் கைது செய்யப்பட்டு அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அதற்போது எல் சாப்போ ஆயுள் தண்டனை கைதியாக உயர் பாதுகாப்புடன் கொலோராடோ மாகாணத்தில் உள்ள சிறையில் உள்ளார்.

இதற்கிடையில், எல் சாப்போ சிறையில் உள்ளபோதும் மெக்சிகோவில் அவனது ஆதரவாளர்கள் தொடர்ந்து போதைப்பொருள் கடந்ததல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த போதைப்பொருள் கும்பல்களை ஒடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால், போதைபொருள் கடத்தல் கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 

இதையடுத்து, போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் போலீஸ் அதிகாரிகளை கொலை செய்யும் கொடூர நடவடிக்கையிலும் கடத்தல் கும்பல் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், மெக்சிகோ போலீஸ் துறையில் அதிகாரியாக 24 ஆண்டுகளாக செயல்பட்டு வருபவர் ரமோன் முனிஸ் (50). இவர் சினலோயா மாகாணத்தின் போலீஸ் துறையில் மூத்த அதிகாரியாக செயல்பட்டு வந்தார்.

இவர் தான் பணியாற்றிவரும் மாகாணத்தில் நடைபெற்றுவரும்  எல் சாப்போவின் கும்பலால் நடைபெற்றுவரும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக பணியாற்றினார். இதனால், ரமோன் முனிசை தீர்த்துக்கட்டவேண்டும் என கடத்தல் கும்பல் திட்டமிட்டு வந்தது.



ரமோன் முனிஸ் கடந்த வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் சினலோயா மாகாணத்தின் க்யுலிஹன் தெரு பகுதியில் உள்ள சாலையில் தனது காரில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் தாங்கள் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு ரமோன் முனிஸ் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

ரமோன் முனிஸ் மீது 100-க்கும் அதிகமான முறை கடத்தல் கும்பல் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில், ரமோன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் மெக்சிகோவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடூர கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பெயரில் ஒருவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags:    

Similar News