செய்திகள்
ஜெகன்மோகன் ரெட்டி

திருப்பதியில் கொரோனா பரவல் அதிகரிப்பு- ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரம் ரத்து

Published On 2021-04-11 11:14 GMT   |   Update On 2021-04-11 11:14 GMT
திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதி எம்.பி.யாக இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்லி துர்கா பிரசாத் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சென்னை ஆஸ்பத்திரியில் இறந்தார்.

திருப்பதி எம்.பி. பதவிக்கான இடைத்தேர்தல் வரும் 17-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் குருமூர்த்தி, தெலுங்கு தேசம் சார்பில் பனபாகாலட்சுமி, பா.ஜ.க., ஜனசேனா (பவன்கல்யாண்) கூட்டணி சார்பில் ரத்தினபிரபா போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களும் ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குருமூர்த்தியை ஆதரித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி 14-ந்தேதி ரேணிகுண்டா அருகே உள்ள மைதானத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருந்தார்.


இந்த நிலையில் சித்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 740 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 265 பேர் கொரோனாவால் பாதிப்படைந்த நிலையில் இன்று திருப்பதியில் 437 பேரும், சித்தூர் 46, மதனப்பள்ளி 20, பாகாலா 17, சந்திரகிரி 10, புத்தூர் 10 என ஒரேநளில் 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து திருப்பதியில் ஜெகன்மோகன் ரெட்டியின் தேர்தல் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாகவும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் குருமூர்த்திக்கு வாக்களித்து அவரை வெற்றிபெற செய்ய வேண்டுமென எழுதியுள்ளார்.

கடிதத்தின் நகல்களை அந்தந்த பகுதியை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன்கல்யாண் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து நாளை திருப்பதியில் வேன் மூலம் பிரசாரம் செய்கின்றனர்.

Tags:    

Similar News