உள்ளூர் செய்திகள்
இடமாற்றம்

அலட்சியத்தால் வாலிபர் கொலை: சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் அதிரடி இடமாற்றம்

Published On 2022-01-13 09:22 GMT   |   Update On 2022-01-13 09:22 GMT
சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், கனகராஜ் ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு கோவை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
கோவை:

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள சித்திரைச்சாவடியில் தோட்டத்தில் புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபரை அந்த பகுதியினர் மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். இதில் அந்த வாலிபர் பலியானார். பின்னர் கொலையை மறைக்க வாலிபர் உடலை ஆற்றில் வீசி விட்டு கும்பல் தப்பியது.

இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 10 பேர் கும்பலை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் போலீசாரின் அலட்சியத்தால் தான் வடமாநில வாலிபர் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தோட்டத்தில் திருடன் புகுந்தது பற்றி ஆலாந்துறை போலீஸ் நிலையத்துக்கு போனில் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். அந்த சமயம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் என்பவர் இரவு பணியில் இருந்தார். அவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜூக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்துக்கு செல்லுமாறு கூறியிருக்கிறார்.

கனகராஜ் நேரில் சென்று விசாரித்தார். அந்த சமயம் வடமாநில வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் வாலிபர் இங்கேயே இருக்கட்டும், காலையில் வந்து அழைத்து செல்கிறேன் என கூறி விட்டு கனகராஜ் சென்று விட்டார்.

அதன்பிறகே வடமாநில வாலிபர் கடுமையாக தாக்கப்பட்டு இறந்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், உடனடி நடவடிக்கையாக வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்க வேண்டும். அப்படி அனுப்பி இருந்தால் வடமாநில வாலிபர் உயிர் பிழைத்து இருப்பார்.

மேலும் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ், உயர் அதிகாரிகள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

இதனால் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், கனகராஜ் ஆகிய 2 பேர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு கோவை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News