செய்திகள்
ரன்தீப் சுர்ஜேவாலா

கர்நாடகாவில் எடியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

Published On 2019-11-13 10:32 GMT   |   Update On 2019-11-13 10:32 GMT
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, அந்த கட்சிகளைச் சேர்ந்த 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

கடந்த ஜூலை மாதம் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ராஜினாமா செய்தவர்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகாததால், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. அதன்பின்னர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது.

காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர்கள் அனைவரும் 2023-ம் ஆண்டு வரை கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்திருந்தார். சபாநாயகரின் உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. அத்துடன், 17 பேரும் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் அனுமதி அளித்தது.

இந்த உத்தரவு காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது, கர்நாடகாவில் பாஜகவின் ‘ஆபரேசன் தாமரை’ திட்டத்தை காட்டுவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



‘எடியூரப்பா அரசாங்கம் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படையில் ஒரு சட்டவிரோத அரசாங்கம் ஆகும். எனவே இந்த அரசாங்கத்தை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

எடியூரப்பா அரசு இனியும் பதவியில் தொடர்வதற்கு தார்மீக உரிமை இல்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

கர்நாடகாவில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள தொகுதிகளில், 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News