ஆன்மிகம்
கள்ளழகர்

மதுரை கூடலழகர், திருமோகூர் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2020-12-19 07:00 GMT   |   Update On 2020-12-19 07:00 GMT
மதுரை கூடலழகர், திருமோகூர் கோவிலில் வருகிற 25-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி தற்போது நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு வருகிற 25-ந் தேதி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கூடலழகர் பெருமாள் கோவிலில் இரவு 7 மணிக்கு மேல் தான் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.

ஆனால் இந்தாண்டு சொர்க்கவாசல் மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாலை 4.30 மணிக்கு கோவில் ராஜகோபுர வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கும், இரவு 8 மணிவரை சொர்க்கவாசல் வழியாக செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள்.

இது தவிர சொர்க்கவாசல் திறப்பு நேரத்தில் மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை பரமபதவாசல் அமைந்துள்ள வடம்போக்கி தெருவிலும், கோவில் முன்புறம் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும் இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக இராப்பத்து உற்சவம் திருக்கோவில் முன்புறம் உள்ள திரு அத்யயன மண்டபத்தில் நடைபெறாது. ஆனால் கோவிலுக்குள் தெற்கு ஆடி வீதியில் உள்ள மண்டபத்திலேயே இந்த உற்சவம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதே போன்று திருமோகூர் காளமேகபெருமாள் கோவிலும் 25- ந் தேதி மாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. அந்த நேரத்தில் பக்தர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை. அதன்பின்னர் பக்தர்கள் கோவிலுக்குள் செல்லவும், சொர்க்கவாசல் செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News