செய்திகள்
சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியாளர்கள்.

கொடைக்கானலில் விடிய விடிய கனமழை- மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிப்பு

Published On 2021-11-30 06:52 GMT   |   Update On 2021-11-30 06:52 GMT
கொடைக்கானலில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழையினால் பல இடங்களில் மரங்கள் முறிந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல்:

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமாகவும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், நள்ளிரவு முதலே விடிய விடிய காற்றுடன் கன மழை கொடைக்கானல் நகர் மற்றும் மலை கிராமங்களில் கொட்டித் தீர்த்தது.

இதனால் வில்பட்டி கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலை மற்றும் கொடைக்கானலிலிருந்து பழனி செல்லும் வழியில் ஆனை கிரிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் கொடைக்கானல் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி தனது முழுக்கொள்ளவை எட்டியதால் உபரி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் வினியோகம் தடைபட்டுள்ளது. மேலும் மலைச்சாலையில் பல்வேறு இடங்களில் பாறைகள் உருண்டு மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வருமாறு அதிகாரிகள் அறிவித்து வருகின்றனர்.

தற்போது காலை 9 மணி வரை 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கொடைக்கானல் நகரின் பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுவதோடு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

Tags:    

Similar News