செய்திகள்

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா பட்டியலை வருமானவரித்துறை வெளியிடவில்லை- ஐகோர்ட்டில் பதில் மனுவில் தகவல்

Published On 2019-01-10 10:48 GMT   |   Update On 2019-01-10 10:48 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. #RKNagarByelection #MadrasHC
சென்னை:

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது அ.தி.மு.க. இரண்டாக உடைந்திருந்தது.

டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிட்டது. அப்போது, ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வாரி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது ரொக்கப்பணம், சில ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அமைச்சர்களின் பெயர்கள் குறிப்பிட்ட ஆவணங்களும் சிக்கியது. இதன் அடிப்படையில், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்யும்படி அபிராமபுரம் போலீசாருக்கு, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டது. அந்த மனுவில், முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பல அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.

ஆனால், குற்றம் சாட்டப்படுபவர்களின் பெயர்களை குறிப்பிடாமல், அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மருது கணேஷ், இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால் சரியாக இருக்காது. அதனால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறையை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.


இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறையின் முதன்மை தலைமை ஆணையர் பி.முரளிகுமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், பிறருடைய வீடுகளிலும் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்ததற்காக ஆதார ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.4.71 கோடி ரொக்கப்பணமும் கீழ் நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் ரூ.3 லட்சமும், ஜெ.சீனிவாசனிடம் ரூ.3 லட்சமும், கல்பேஷ் எஸ்.ஷாவிடம் இருந்து ரூ.1 கோடி 10 லட்சமும், சாதிக் பாட்ஷாவிடம் இருந்து 6 லட்சமும், கார்த்திகேயனிடம் இருந்து ரூ.8 லட்சமும், ஆர்.சரத்குமாரிடம் இருந்து ரூ.11 லட்சமும், ஆர்.சின்னத் தம்பியிடம் இருந்து ரூ.20 லட்சமும், டாக்டர் செந்தில்குமாரிடம் இருந்து ரூ.15 லட்சமும், நயினார் முகமதுவிடம் இருந்து ரூ.2 கோடியே 95 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு, இந்த பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை வருமான வரித்துறை வெளியிடவில்லை. அது போன்று வெளியிடும் நடைமுறை இல்லை அனைத்து விவரங்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், ரொக்கப்பரிசு குறித்த விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #RKNagarByelection #MadrasHC
Tags:    

Similar News