லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு வேண்டாம் ‘கொரோனா பயம்’

குழந்தைகளுக்கு வேண்டாம் ‘கொரோனா பயம்’

Published On 2020-08-19 04:20 GMT   |   Update On 2020-08-19 04:20 GMT
இந்த கொரோனா காலகட்டத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மன அமைதியுடனும், மன வலிமையுடனும் இருப்பதற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும்.
ஊரடங்கு, கொரோனா பீதி, பள்ளி விடுமுறை இவை மூன்றும் குழந்தைகளின் அன்றாட செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் சூழலால் கவலை, பீதி, மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். இந்த காலகட்டத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மன அமைதியுடனும், மன வலிமையுடனும் இருப்பதற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் மன அழுத்தத்திற்கு ஆளாகுவதற்கு அவர்களிடம் தனிப்பட்டக் காரணங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பது மன நல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

அதிகப்படியான அழுகை, அடிக்கடி எரிச்சல்படுவது, சின்ன விஷயத்திற்கு கூட கவலைப்படுவது, வழக்கத்திற்கு மாறாக படுக்கையில் சிறுநீர் கழிப்பது, சரியாக தூங்காமல் இருப்பது, கவனக்குறைபாடு, விரும்பி விளையாடும் விளையாட்டுகள் மீது கூட ஆர்வம் இல்லாமல் இருப்பது, அடிக்கடி தலைவலி ஏற்படுவது, உடல் வலியால் அவதிப்படுவது போன்றவை குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப் பதற்கான அறிகுறிகள் ஆகும்.

“குழந்தைகளும், பதின்ம வயதை கடந்தவர்களும் பெற்றோர், தங்களை சுற்றி இருக்கும் பெரியவர்களின் அணுகுமுறைகளின் ஒரு பகுதியை பின்பற்றுகிறார்கள். இந்த சமயத்தில் கொரோனா நோய் தொற்று சார்ந்த விஷயங்களை நம்பிக்கையுடனும், அமைதியாகவும் கையாள வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கும் ஆதரவாக இருக்க முடியும். குழந்தைகள் முன்னால் கொரோனா பற்றிய கவலையை வெளிப்படுத்த வேண்டாம். பீதியுடனும் இருக்க வேண்டாம். துணையுடன் பகிரங்கமாக சண்டை போடவோ, வாதாடவோ கூடாது. எல்லா வகையிலும் வீட்டில் அமைதியான சூழலை உருவாக்க வேண்டும். அவைதான் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தும்” என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.

முககவசம் அணியாவிட்டால் கொரோனா தாக்கிவிடும் என்பது போன்ற அச்ச உணர்வை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்திவிடக்கூடாது. முககவசம் அணிவது எந்த அளவுக்கு பாதுகாப்பானது? எந்த அளவுக்கு நோய் தொற்றுவில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பதை விளக்கமாக சொல்லி புரிய வைக்க வேண்டும். ஒருவித பயத்துடன் முககவசத்தை அணிவது மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். குழந்தைகளை அதிக நேரம் டி.வி. பார்க்கவோ, இணையதளங்களை பார்வையிடவோ அனுமதிக்கக்கூடாது. கொரோனா நோய்த்தொற்று பற்றிய விஷயங்களை அவர்கள் தவறாக புரிந்துகொள்ளக்கூடும். அது அவர்களிடத்தில் கவலையை அதிகரிக்கச்செய்துவிடும். வீண் பதற்றத்தையும் ஏற்படுத்தும். கொரோனா பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு பதிலாக நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவோ, அவர்களுடன் ஆன்லைனில் அரட்டை அடிக்கவோ குறிப்பிட்ட நேரத்தை செலவிட அனுமதிக்கலாம்.

பள்ளிக்கூடம் செல்லும் காலகட்டத்தில் எத்தகைய வழக்கத்தை பின்பற்றினார்களோ அதையே பின்தொடர வைக்கலாம். அது அவர்களை சுற்றியுள்ள தேவையற்ற குழப்பங்களை சமாளிக்க உதவும். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தாலும் புத்தகங்களை வாசிக்க ஊக்குவியுங்கள். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி குழந்தைகளுடன் அமர்ந்து பாடங்களை சொல்லிக்கொடுக்கலாம். ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் அதோடு தொடர்புடைய இணையதள விஷயங்களையும் கற்றுக்கொடுக்கலாம். அது அவர்களின் அறிவை மேம்படுத்த உதவும். சரியான நேரத்தில் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது என குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருங்கள். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவுகளை வழங்க வேண்டிய காலகட்டம் இது. அதனால் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதற்கு கவனம் செலுத்துங்கள். 
Tags:    

Similar News