செய்திகள்
ககன்தீப் சிங் பேடி

சென்னையில் 97 பேருக்கு டெங்கு காய்ச்சல்- ககன்தீப் சிங் பேடி தகவல்

Published On 2021-10-01 03:12 GMT   |   Update On 2021-10-01 10:31 GMT
சென்னையில் மழைநீர் வடிகால்களில் கொசுப்புழுக்களை அழிக்க ஒரு வார்டுக்கு கொசுமருந்து தெளிப்பான்களுடன் 2 நபர்கள் என 200 வார்டுகளுக்கும் 400 நபர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக மண்டல நல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மண்டல பூச்சியியல் வல்லுனர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது.

இதையடுத்து நிருபர்களிடம் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

சென்னையில் கடந்த 15 நாட்களில் 97 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் அடையாறு மண்டலத்தில் 27 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 18 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 15 பேரும் அடங்குவர். எனவே, இந்த மண்டலங்களில் அனைத்து கட்டிடங்கள் மற்றும் வீடுகளிலும் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு கொசுப்புழு வளரிடங்களை கண்டறிந்து அதனை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சென்னையில் மழைநீர் வடிகால்களில் கொசுப்புழுக்களை அழிக்க ஒரு வார்டுக்கு கொசுமருந்து தெளிப்பான்களுடன் 2 நபர்கள் என 200 வார்டுகளுக்கும் 400 நபர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒரு குழுவில் உள்ள நபர் தினசரி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கொசு மருந்து தெளிக்க வேண்டும். ஒரு இடத்தில் வாரத்துக்கு ஒரு முறை கண்டிப்பாக மருந்து தெளிக்கவேண்டும்.



257.58 கிலோ மீட்டர் நீர்வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்க 128 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவர்கள் நீர்வழித்தடங்களில் தினசரி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கொசு மருந்து தெளிக்க வேண்டும். ஒரு இடத்தில் வாரத்துக்கு ஒரு முறை கண்டிப்பாக மருந்து தெளிக்கவேண்டும். மேலும், சென்னையில் வீடுகள், கிணறுகள், நீர்தேக்க தொட்டிகள், கட்டுமான பணியிடங்கள், காலி இடங்களில் கொசுப்புழுக்கள் வளரிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் கொசுப்புழுக்கள் உருவாகாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்படும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கடைகள், ஓட்டல்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், கட்டுமான இடங்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அந்தவகையில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசுப்புழு வளரும் இடங்களை கண்டறிந்து, கட்டிடத்தின் உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை அவ்வப்போது பெய்து வருவதால், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் கொசுப்புழுக்கள் வளர வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். வீடுகளில் களஆய்வு மேற்கொள்ள மண்டல சுகாதார அலுவலரால் வழங்கப்பட்ட மாநகராட்சி அடையாள அட்டையுடன் வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

கொசுப்புழுக்கள் நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகள் குறித்த ஒரு வார காலத்திற்கான அட்டவணை சென்னை மாநகராட்சியின் http://chennaicorpration.gov.in/fogging என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அட்டவணையில் உள்ள நாட்களில் தங்கள் பகுதிகளில் கொசுஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா? என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதுகுறித்த புகார்களை பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News