செய்திகள்
ஸ்ரேயாஸ் அய்யர் - ஜடேஜா

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 258/4 - 3 பேர் அரை சதம் அடித்து அசத்தல்

Published On 2021-11-25 12:13 GMT   |   Update On 2021-11-25 12:13 GMT
நியூசிலாந்து அணிக்கு எதிரான் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக ஆடி தனது முதல் அரை சதத்தை அடித்து அசத்தினார்.
கான்பூர்:

இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கில்-அகர்வால் களமிறங்கினர். ஜேமிசன் பந்து வீச்சில் தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய அகர்வால் 13 ரன் எடுத்த போது கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா வழக்கமாக மெதுவாகவே விளையாடினார். மறுபக்கம் ஆடி கொண்டிருந்த கில் தனது 4-வது அரை சதத்தை பதிவு செய்தார். அரை சதம் அடித்த சிறிது நேரத்திலேயே ஜேமிசன் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

இந்நிலையில் அணியின் கேப்டன் ரகானே களமிறங்கினார். அவரது பேட்டிங் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் இந்த போட்டியில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். புதிதாக களத்தில் வந்த அவர் பவுண்டரிகளை பறக்க விட்டு அருமையாக ஆடினார்.

தொடர்ந்து மந்தமாகவே ஆடி வந்த புஜாரா 88 பந்துகளை சந்தித்த நிலையில் 26 ரன்னில் சவுத்தி பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்தடுத்த விக்கெட்டுகள் சரிந்த நிலையில் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார்.

எப்படியும் அரைசதமாவது அடிப்பார் என எதிர்பார்த்த ரகானே 63 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகளுடன் 35 ரன்களை எடுத்து ஜேமிசன் பந்து வீச்சில் போல்ட் ஆனார். இதனையடுத்து ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் திணறி வந்தனர். பொறுப்பாக ஆடி வந்த அய்யர் தனது முதல் போட்டிலேயே அரை சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் இருந்த ஜடேஜாவும் தனது 17-வது அரை சதத்தை கடந்தார். 

இந்நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் நாளில் 84 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.  ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளனர். ஸ்ரேயாஸ் அய்யர் 136 பந்துகளில் 75 ரன்களுடனும் ஜடேஜா 100 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து அணி தரப்பில் ஜேமிசன் 3 விக்கெட்டும், சவுத்தி 1 விக்கெட் வீழ்த்தினர்.
Tags:    

Similar News