செய்திகள்
கழிவறை கட்டித்தந்த ஆசிரியர் செந்தில்குமாருடன் மாணவ, மாணவிகள்.

மாணவிகளின் சிரமத்தை போக்க ஆசிரியர் செய்த செயல்- பாராட்டுகள் குவிகிறது

Published On 2019-12-06 05:41 GMT   |   Update On 2019-12-06 05:41 GMT
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பல வருடங்களாக மாணவிகள் அனுபவித்து வந்த சிரமத்தை போக்க ஆசிரியர் செய்த செயலுக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள் உள்ளன. இதில் லால்குடி அருகே பூவாளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் கழிப்பறை வசதி இல்லாமல் சிரமப்பட்டனர்.

குறிப்பாக மாணவிகள் மாதவிடாய் காலங்களில் பள்ளி கழிவறையில் கதவுகள் இல்லாதது, சரியான வசதி இல்லாதது போன்ற காரணங்களால் கடும் அவதிப்பட்டனர்.

இதுபோன்ற காலங்களில் பல மாணவிகள் பள்ளிக்கு வரமுடியாமல் விடுப்பு எடுத்தும் வந்தனர். இதனால் பள்ளியில் பாடம் கற்பதிலும் சிரமம் ஏற்பட்டது. சில மாணவிகள் அதையும் சகித்துக்கொண்டு பள்ளிக்கு வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியை சேர்ந்த 2 மாணவிகள் பள்ளி அருகில் உள்ள வங்கியின் பெண் ஊழியரிடம் தங்கள் சிரமத்தை கூறி, வங்கி கழிப்பிடத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கும்படி கெஞ்சி கேட்டனர்.

ஆனால் அந்த ஊழியர் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் அந்த மாணவிகள் தவித்தனர். அப்போது அந்த வழியாக பள்ளியின் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் வந்தார். வங்கி முன்பு ஏன் நிற்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த மாணவிகள் தங்கள் சிரமத்தை தயக்கத்துடன் கூறினர்.

இதைக்கேட்ட ஆசிரியர் செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்தார். பள்ளியில் உள்ள கழிப்பறை பெண்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதையும் கேள்விப்பட்டு வருத்தப்பட்டார். பல வருடங்களாக பள்ளி மாணவிகள் சிரமப்பட்டு கொண்டிருப்பதை அறிந்து மனம் புழுங்கினார்.

பல மாணவிகள் காலை 8 மணிக்கு புறப்படும் போது வீட்டு கழிவறையை பயன்படுத்துவதோடு மீண்டும் வீட்டிற்கு திரும்பிய பிறகுதான் மாலை 4 மணிக்கு மேல் மறுபடியும் கழிப்பறையை பயன்படுத்தி வருவதையும் தெரிந்து நொந்து போனார்.

இதனால் மாணவிகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதையும், பெற்றோர்கள் மூலம் தெரிந்து கொண்டார். இதற்கு தீர்வு காண ஆசிரியர் செந்தில்குமார் அரசிடம் வேண்டுகோள் வைக்காமல் தானாகவே களத்தில் இறங்கினார். பொது மக்களிடம் நிதியை திரட்டி பள்ளி வளாகத்தில் நவீன கழிப்பிடம் கட்டும் முயற்சியை தொடங்கினார். கடந்த 2018-ம் ஆண்டு தான் வாங்கிய சிறந்த ஆசிரியருக்கான ரூ.50 ஆயிரம் நிதியை முதல் ஆளாக இதற்கு ஒதுக்கினார்.

இதுதொடர்பான தகவல் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரவியது. செந்தில் குமாரின் முயற்சிக்கு இந்தியா முழுவதும் இருந்து கரங்கள் உதவின. இதைத் தொடர்ந்து பள்ளியில் 820 சதுர அடியில் ரூ.10.5 லட்சம் மதிப்பில் மாணவிகளுக்காக 14 கழிப்பறைகளும், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகளுக்கு 4 கழிப்பறையும், மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு ஒரு கழிப்பறையும் என மொத்தம் 19 கழிப்பறைகளுடன் கூடிய நவீன கழிப்பிட கட்டிடம் கட்டும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.


கடந்த மாதம் கட்டும் பணி முடிவடைந்தது. கடந்த வாரம் பொதுமக்கள் முன்னிலையில் நவீன கழிப்பிடம் திறக்கப்பட்டது. நீண்ட வருடங்களாக சிரமப்பட்டு வந்த மாணவிகள் ஆசிரியரின் முயற்சியால் பட்ட சிரமங்களில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர்.

இந்த கழிப்பிடம் கட்டும் போது ஆசிரியர் செந்தில் குமார் கடும் சிரமங்களையும் சந்தித்துள்ளார். சினிமாவில் வருவது போல இதை சிலர் தடுக்கவும் முயற்சித்து உள்ளனர். மிரட்டியும் உள்ளனர். கட்டிட பொருட்களை களவாடியும் உள்ளனர்.

அதையும் மீறி பூவாளூர் அரசு பள்ளி மாணவிகளுக்கு நவீன கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.
Tags:    

Similar News