வழிபாடு
கள்ளழகர்

தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு நாளை மாலை புறப்பாடு

Published On 2022-04-13 05:51 GMT   |   Update On 2022-04-13 05:51 GMT
2 ஆண்டுகளுக்கு பின்னர் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என புகழ்ந்து அழைக்கப்படுவது. 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது மதுரையிலிருந்து 21 கி.மீ தூரத்தில் உள்ளது அழகர்மலை ஆகும். இங்குள்ள அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த கோவிலில் சித்திரை திருவிழா நேற்று மாலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

இதில் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் தோளுக்கினியான் பல்லக்கில் புறப்பாடாகி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தன. பின்னர் அதே பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேர்ந்தார்.

இன்று(புதன்கிழமை) மாலையிலும் அதே விழா நடைபெறுகிறது. நாளை மாலையில் 6-15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். வழி நெடுக உள்ள பொய்கைகரைபட்டி, கள்ளந்தரி, அப்பன் திருப்பதி உள்ளிட்ட பல மண்டபங்களில் சுவாமி எழுந்தருள்வார். இதற்காக 456 மண்டபங்கள் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 15-ந் தேதி அதிகாலையில் 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறும்.

இதில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு 16-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5.50 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் நடைபெற உள்ளது.

கள்ளழகர் கோவிலை விட்டு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநெடுகிலும் வண்டியூர் வரை உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருள்கிறார். 17, 18, தேதிகளிலும் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். 19-ந் தேதி அன்று இரவு அதிகாலையில் 2.30 மணிக்கு பூப்பல்லக்கு விழா நடைபெறும்.

பக்தர்கள் நேர்த்தி கடனாக அழகர் வேடமணிந்து தண்ணீர் பீய்ச்சும் போது தோலினால் ஆன தண்ணீர்ப்பை மூலமாகவே மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும். செயற்கை காற்று பம்பு மூலமாகவோ, ரசாயன பொடிகள் கலந்தோ கண்டிப்பாக சுவாமி மீது தண்ணீர் பீய்ச்ச கூடாது. என கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 2 ஆண்டுகளுக்கு பின்னர் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. 20-ந் தேதி பகல் 1.30 மணிக்கு அழகர்மலைக்கு கள்ளழகர் சென்று கோவிலில் இருப்பிடம் சேருகின்றார். 21-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News