செய்திகள்
22 தீர்த்தகிணறுகளை திறக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்தபடம்.

ராமேசுவரம் கோவிலில் தீர்த்த கிணறுகளை திறக்கக்கோரி பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-08 11:57 GMT   |   Update On 2021-10-08 11:57 GMT
ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளை திறக்க வலியுறுத்தி கோவில் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமேசுவரம்:

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் கடந்த 4 மாதத்திற்கு மேலாக திறக்கப்படாமல் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் கோவிலுக்கு வரக்கூடிய ஏராளமான பக்தர்கள் தீர்த்த கிணறுகளில் புனித நீராட முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் தீர்த்த கிணறுகளையே நம்பி வாழும் சுமார் 400-க்கும் மேற்பட்ட யாத்திரை பணியாளர்கள் குடும்பத்தினர் வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளை திறக்க வலியுறுத்தியும் மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு வழக்கம்போல் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தியும் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ராமேசுவரம் கோவிலின் மேற்கு வாசல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் பேராசிரியர் கனகசபாபதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் நாகேந்திரன், நாகராஜன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் குமார், சுந்தர முருகன், மாவட்ட துணைத்தலைவர் பவர் நாகேந்திரன், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது டாஸ்மாக் கடை, பள்ளிக்கூடம், கல்லூரி, சினிமா தியேட்டர் ஆகியவை திறந்துள்ள தமிழக அரசு ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளை திறக்காமல் இருப்பது மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறில் பக்தர்களை அனுமதிக்காமல் இருப்பது கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கோஷமிட்டனர்.
Tags:    

Similar News