உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ.1.15 கோடியில் அறிவுசார் மையம்

Published On 2022-01-13 08:28 GMT   |   Update On 2022-01-13 08:28 GMT
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் அறிவுசார் மையம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பெரம்பலூர்:

தமிழகத்தில் பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகளின் நிர்வாகங்கள், தங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கல்வி நிலையங்களை அமைத்து, கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. 

ஆனால், பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் கல்வி நிலையங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்ழீநிலையில், பொதுமக்களுக்கு அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட விரும்பிய நகராட்சி நிர்வாகம் முதல்கட்டமாக அறிவுசார் மையம், நூலகம் ஆகியவற்றை தொடங்க விரும்பியது. 

இதற்காக விரிவான திட்டங்களுடன் தமிழக அரசிடம் முறைப்படி அணுகியதன் விளைவாக, அண்மையில் திட்ட அனுமதி மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய நகராட்சி அலுவலக வளாகத்தில், நிர்வாக அலுவலக கட்டிடத்தின் பின்பகுதியில் 3,067 சதுர அடி பரப்பளவில், ரூ.1.15 கோடி மதிப்பில் அறிவு சார் மையம் அமைக்கப்பட உள்ளது. 

இந்த மையத்தில் வரவேற்பறை, அலுவலக அறை, கட்டுப்பாட்டு அறை, படிப்பகம், நூலகம், பயிற்சி மையம், கணினி அறை, உணவருந்தும் இடம், கழிப்பறைகள், வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை அமைய உள்ளன.

மேலும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தேவையான நூல்கள், கலை, அறிவியல், பொருளாதார, பொறியியல், சட்டம், மருத்துவம் சார்ந்த பாடப்பிரிவு நூல்கள், பொது அறிவு நூல்கள், கலைக் களஞ்சியங்கள் ஆகியவை இடம் பெறுவதுடன், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தகுதிகளை இளைஞர்கள் வளர்த்துக் கொள்வதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன.

இதில் சிறந்த ஆளுமைகள் மூலம் இணைய வழி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, இணைய வழி மாதிரி போட்டித் தேர்வுகளும் நடத்தப்படும்.

மேலும் இணைய வழி நேர்முகத் தேர்வு, போட்டித் தேர்வுகளையும் இங்கிருந்து இளைஞர்கள் எதிர் கொள்ளலாம். இம்மையத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கி, 6 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News