செய்திகள்
கொரோனா வைரஸ்

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்

Published On 2020-11-24 08:10 GMT   |   Update On 2020-11-24 08:10 GMT
சீனாவில் ஷாங்காய், தியான்ஜின், மன்சவுலி ஆகிய 3 நகரங்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
பிஜிங்:

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. பின்னர் நாடு முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.

சீனாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுமார் 3½ மாதங்களுக்கு பிறகு சீனாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் சில நாட்கள் கழித்து தலைநகர் பிஜிங் உள்ளிட்ட சில நகரங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அப்பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதனால் கொரோனா வைரஸ் மீண்டும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சீனாவில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளது.

இந்தநிலையில் ஷாங்காய், தியான்ஜின், மன்சவுலி ஆகிய 3 நகரங்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 2 பேர் விமான நிலைய ஊழியர் ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பணிபுரிந்த இடங்களில் பலருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஷாங்காயில் உள்ள சர்வதேச விமான பணியாளர்கள் 17 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல் தியான்ஜின் நகரை சேர்ந்த 22 லட்சம் பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதேபோல் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட மன்சவுலி நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News