செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Published On 2021-01-10 03:17 GMT   |   Update On 2021-01-10 03:17 GMT
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.வுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்று பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

2021 புத்தாண்டு பல சிறப்புகளை கொண்டது. அ.தி.மு.க.வுக்கு, இது 50-வது ஆண்டு. அ.தி.மு.க. 10 ஆண்டுகளாக ஆட்சி நிறைவு செய்யும் ஆண்டு. கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி கண்டுபிடித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை உலக அரங்கில் கர்வத்துடன் தலைநிமிர்ந்து நிற்க வைத்த ஆண்டு. அதேநேரத்தில், கொரோனாவை விட மோசமான அரசியல் வைரசாக திகழும் தி.மு.க.வை அரசியல் களத்தில் இருந்து விரட்டி அடிக்கும் ஆண்டாக 2021 திகழப்போகிறது. அ.தி.மு.க. தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெறும் ஆண்டாக இந்த ஆண்டு திகழும். இந்த ஆண்டு தமிழகத்தில் புதிய புரட்சியை உருவாக்கும்.

அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சராக, எம்.பி., எம்.எல்.ஏ. என பல பதவிகளில், பல பொறுப்புகளில் இருப்பதை உருவாக்கி தந்தவர் ஜெயலலிதா. அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை என்ற நிலையை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கி தந்திருக்கிறார்கள். அவர்கள் வகுத்து தந்த பாதையில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மீது மக்கள் ஆழ்ந்த நம்பிக்கையும், நல்ல பெயரும் கொண்டுள்ளனர். எங்கு சென்றாலும் ஆட்சி நன்றாக நடக்கிறது. ஒற்றுமையாக செயல்படுகின்றனர் என்று கூறுகின்றனர். இப்படி ஒரு சூழ்நிலை, நல்ல பெயர் எந்த ஒரு ஆளும் கட்சிக்கும் இருந்தது கிடையாது. மக்களுடைய இந்த மகத்தான ஆதரவை, சிந்தாமல், சிதறாமல் இரட்டை இலை சின்னத்தை நோக்கி கொண்டு வந்து சேர்க்கவேண்டும். கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் கொண்டு வந்து சேர்க்கவேண்டிய தலையாய கடமை தொண்டர்களுக்கு இருக்கிறது.

தி.மு.க.வின் ஊழல்களை மக்களிடம் சொல்லுங்கள். தமிழகத்துக்கு தி.மு.க. செய்த துரோகங்களையும், மக்கள் விரோத செயல்களையும் மக்களிடம் எடுத்துச்சொல்லுங்கள். கச்சத்தீவை தாரை வார்த்தது, காவிரி வழக்கை தன்னிச்சையாக வாபஸ் பெற்றது, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் இருந்தது, ஜல்லிக்கட்டு நடைபெறாமல் தடுத்தது, நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது, மீத்தேன் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கையெழுத்திட்டது என தி.மு.க. செய்த பல்வேறு துரோகங்களை மக்களிடம் சொல்லுங்கள். இப்படி, துரோகம் செய்துவிட்டு, நல்ல பிள்ளை போல் நாடகம் ஆடுவதை தோலுரித்து காட்டவேண்டும்.

நாம் ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் இருந்து ஒருபோதும் விலகிச் செல்லமாட்டோம். கட்சியின் தொண்டர்கள் தான் நம்முடைய எஜமான்கள். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அனைவருமே மக்களுக்கு சேவையாற்றும் சேவகர்கள். தமிழக மக்கள் தான் நமக்கு உத்தரவிடும் முதலாளிகள். நாம் எல்லோரும் அவர்களுக்காக பணியாற்றுபவர்கள். நமது கட்சியில் வேட்டி கட்டும் ஆண்கள் உண்டு. ஆனால் கோஷ்டி சேர்க்கும் ஆட்கள் கிடையாது. கட்சி தொண்டர்கள் எனக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்று நான் கூறியது கிடையாது. முதல்-அமைச்சரும் எனக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்று கூறியது கிடையாது.

யாரும் தங்களுக்கு விசுவாசமாக இருக்குமாறு கூறியது கிடையாது. கட்சிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்றும், கட்சிக்காக உழையுங்கள் என்றும் தான் கூறுகிறார்கள். தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அதற்காகத்தான் உழைக்கிறார்கள். அ.தி.மு.க.வில் மட்டும் தான் தொண்டர்கள் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர் ஆக முடியும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். வெற்றி ஒன்றே இலக்கு என்ற அடிப்படையில் நாம் பணியாற்ற வேண்டும். அ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை வரும் தேர்தலில் உருவாக்குவோம். நாம் அனைவரும் ஒற்றுமையாக உழைத்து 2021-ல் அடையும் வெற்றி அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் கண்டிராத வெற்றியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News