செய்திகள்
மழை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 61 மில்லி மீட்டர் மழை பதிவு

Published On 2021-10-20 07:38 GMT   |   Update On 2021-10-20 07:38 GMT
பாபநாசம் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து இன்று காலை 138.30 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 144.72 அடியாக உள்ளது.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்தது.

இதன் காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயர்ந்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பும் நிலையை அடைந்தது.

இதனால் ஆறுகளில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த நிலையில் நேற்று நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மழை நின்றது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்து, இன்று இயல்பான அளவு தண்ணீர் சென்றது. காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நேற்று இரவு கனமழை கொட்டியது.

61 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது. கடம்பூரிலும் 23 மில்லி மீட்டர் அளவில் கனமழை பெய்தது. மற்ற எந்த பகுதியிலும் மழை பெய்யவில்லை.

இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

பாபநாசம் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து இன்று காலை 138.30 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 144.72 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 77.30 அடியாக உள்ளது. கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கும் தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளது.

அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

குற்றால அருவிகளிலும் இன்று தண்ணீர் நன்றாக விழுந்தது. அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு இதமாக தண்ணீர் விழுந்தாலும், கொரோனா ஊரடங்கு காரணமாக அங்கு குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

களக்காடு தலையணை அருவியில் பொதுமக்கள் இன்றும் வழக்கம் போல் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News