செய்திகள்
ஆ.ராசா

ஆ.ராசா 2 நாட்களுக்கு பிரசாரம் செய்ய தடை- தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

Published On 2021-04-01 09:01 GMT   |   Update On 2021-04-01 12:02 GMT
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆ.ராசா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக எம்பி ஆ.ராசா விமர்சனம் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த புகார் மனு உரிய நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆ.ராசா மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தமிழக  தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியது.

இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆ.ராசாவுக்கு தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளித்து கடிதம் அனுப்பியிருந்தார் ஆ.ராசா. இந்த விளக்கத்தை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் தனது உத்தரவை வெளியிட்டுள்ளது.



முதல்வருக்கு எதிரான விமர்சனம் குறித்து ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், அவர் 2 நாட்களுக்கு (48 மணி நேரம்) பிரசாரம் செய்ய தடை விதித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்தும் ஆ.ராசாவின் பெயரை நீக்கி உத்தரவிட்டது. 

ஆ.ராசா தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியது கண்டிக்கத்தக்கது, இனி எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
Tags:    

Similar News