சிறப்புக் கட்டுரைகள்
புஜங்காசனம்

ஆரோக்கியம் நம் கையில்: தோல் வியாதியை தடுக்கும் முத்திரைகள்- 132

Published On 2022-05-04 11:46 GMT   |   Update On 2022-05-04 11:46 GMT
முதுகுத்தண்டுவடம் அறுவை சிகிச்சை செய்தவர்கள், முதுகு வலி அதிகம் உள்ளவர்கள், இதய வலி உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பயிற்சி செய்ய வேண்டாம். முத்திரை மட்டும் செய்தால் போதும்.


ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் உடலில் உள்ள  எல்லா உறுப்புக்களும் நல்ல பிராண ஆற்றலை பெற்று இயங்க வேண்டும்.  ஒவ்வொரு உறுப்பும் அதனதன் பணியை சரிவர சிறப்பாக செய்ய வேண்டும்.  அதற்கு நமது உடலில் ஒவ்வொரு செல்களிலும் பஞ்ச பூதங்கள் சமமான அளவில் இயங்க வேண்டும்.  இதற்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது.  நமது எண்ணங்கள் நேர்முகமானதாக இருக்க வேண்டும்.  மனதில் பய உணர்வு வெறுப்புணர்வு இருக்கும் பொழுது உடலில் நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக சுரக்காது,  ஒன்று அதிகமாக சுரக்கும்,  அல்லது குறைவாக சுரக்கும். ஒவ்வொரு நாளமில்லா சுரப்பிகளும் ஒவ்வொரு முக்கியமான உடல் உறுப்புகளுக்கு உயிர் சக்தி கொடுத்து கட்டுப்படுத்தும் விதத்தில் நமது உடல் அமைக்கப்பட்டுள்ளது.

கோனாடு சுரப்பி சிறுநீரகம் உறுப்பை கட்டுப்படுத்துகின்றது.  அட்ரீனல் சுரப்பி ரத்த அழுத்தம் வராமல் வாழ வழி வகை செய்கின்றது.  பாங்கிரியாஸ் நீரிழிவு வராமல் வாழ துணைபுரிகின்றது.  தைமஸ் சுரப்பி இதயம் நன்கு இயங்க வழி வகை செய்கின்றது.  தைராய்டு சுரப்பி குரல் வளம் பெண்களுக்கு கருப்பை திறம்பட இயங்க உடல் பருமனை சரி செய்ய உதவுகின்றது.  பீனியல் சுரப்பி எதிர் காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளை கூட துல்லியமாக உணர்த்தும் ஆற்றல் பெற்றது.  பிட்யூட்டரி சுரப்பி ஆண், பெண், உடல் வளர்ச்சி, பாலுணர்வை தூண்டுதல் முதலியவற்றை செய்கின்றது.  

இந்த சுரப்பிகள் அனைத்தும் அதனதன் விகிதத்தில் சுரந்தால்தான் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாக இயங்கும்.  அப்பொழுது எந்த ஒரு தொற்றுக் கிருமியும் நம்மைத் தாக்காமல் வாழலாம்.  அதற்கு உடல், மனதை சரி செய்யும், சிறப்பாக இயங்கச் செய்யும் யோகா முத்திரைகளை தினமும் காலை, மாலை பயிற்சி செய்தால் நிச்சயமாக நாம் நலமாக வளமாக வாழ முடியும்.

இன்றைய சூழ்நிலையில் மீண்டும் வைரஸ் உருமாறி சில நாடுகளில் வருகின்றது என்ற தகவலை கேட்டவுடன் அச்சப்படாதீர்கள், ஒவ்வொரு மனிதனும் நமது உடலில் உள்ள எல்லா அவயங்களும் சரியாக இயங்கும் வழிமுறைகளையும், நோய் எதிர்பாற்றலுடன் நுரையீரலை நன்கு இயங்கச் செய்யும் யோகா, முத்திரை பயிற்சிகளை தினமும் பயிலுங்கள். நிச்சயமாக எந்த ஒரு தொற்றுக்கிருமியும் நம்மை தாக்காமல் வாழலாம்.

நோய் எதிர்ப்பாற்றல் தரும் நுரையீரலை வலுப்படுத்தும் யோகா பயிற்சிகள்  

புஜங்காசனம்: விரிப்பில் குப்புறபடுக்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும்.  கைகளை இதய பக்கவாட்டில் படத்தில் உள்ளது போல் கை விரல்கள் தரையில் படும்படி வைத்து மூச்சை இழுத்துக்கொண்டே மெதுவாக கழுத்து, தலை, அடி முதுகு வரை உயர்த்தவும்.  பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும். இது போல் மூன்று முறைகள் செய்யவும்.

முக்கிய குறிப்பு: முதுகுத்தண்டுவடம் அறுவை சிகிச்சை செய்தவர்கள், முதுகு வலி அதிகம் உள்ளவர்கள், இதய வலி உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பயிற்சி செய்ய வேண்டாம். முத்திரை மட்டும் செய்தால் போதும்.

பலன்கள்: நுரையீரல் நன்றாக இயங்கும், முதுகு தண்டுவடம் நன்கு திடமாகும். இதய வால்வுகள் சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம் சிறப்பாக இயங்கும். கழுத்து வலி வராமல் வாழலாம்.  சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வாழலாம்.  ஆஸ்துமா, சைனஸ், மூக்கடைப்பு, ஒற்றை தலைவலி வராமல் வாழலாம்.  அடிக்கடி சளி பிடிப்பது நிற்கும்.


பிரம்மா முத்திரை: நிமிர்ந்து அமரவும், முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும்.  பின் கட்டைவிரல் உள்ளங்கையில் படும்படி மடித்து மற்ற நான்கு விரல்களை மூடவும், இருக்கைகளில் செய்யவும், இது ஆதி முத்திரை, அந்தக் கைகளை மடக்கி படத்தில் உள்ளது போல் நான்கு விரல்கள் தொடும்படி இதயம் முன்பு வைக்கவும்.  மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஐந்து முறைகள் செய்யவும். பின் சாதாரண மூச்சில்  இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.


லிங்க முத்திரை: நிமிர்ந்து அமரவும். முது கெலும்பு நேராக இருக்கட்டும்,  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் இருகை விரல்களை கோர்க்கவும். இடது கை கட்டை விரல்களை மட்டும் நேராக படத்தில் உள்ளதுபோல் வைக்கவும்.  சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை, மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

முகுள முத்திரை: நிமிர்ந்து அமரவும்.  முது கெலும்பு நேராக இருக்கட்டும் கட்டைவிரல் நோக்கி மற்ற நான்கு விரல்களையும் குவித்து மேல் நோக்கி வைக்கவும்.  இரு கைகளிலும் செய்யவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.  காலை, மாலை இரு வேளையும் சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.


எளிய நாடிசுத்தி: விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  இடது கை சின் முத்திரையில் வைக்கவும்.  வலது கை பெருவிரல் வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  இதை போல் பத்து முறைகள் செய்யவும். பின் வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  பத்து முறைகள் செய்யவும்.

இப்போது வலது நாசியை அடைத்து இடது நாசியில் மூச்சை இழுத்து உடன் இடது நாசியை அடைத்து வலது நாசியில் மூச்சை வெளிவிடவும்.  இதே போல் பத்து முறைகள் இடதில் இழுத்து வலதில் மூச்சை வெளிவிடவும்.

இதேபோல் மாற்றி செய்ய வேண்டும்.  வலது நாசியை அடைத்து இடது நாசியில் மூச்சை வெளிவிடவும்.  வலதில் இழுத்து இடதில் வெளிவிடவும் பத்து முறைகள் செய்யவும்.


இப்பொழுது கண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும்.  பத்து முறைகள்.

மேற்கூறிய பயிற்சிகளை அதிகாலை 4  மணிக்கு எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு பயிற்சி செய்யவும்.  மாலை 5 மணி முதல் 7  மணிக்குள் ஒரு முறை பயிற்சி செய்யவும்.  நிச்சயமாக நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.  நுரையீரல் சிறப்பாக இயங்கும்.  எந்த ஒரு தொற்றுக்கிருமியும் தாக்காமல் வாழலாம்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் 4  நாட்கள் பயிற்சி செய்ய வேண்டாம்.  மற்ற நாட்களில் பயிற்சி செய்யலாம்.

முகத்தில் பருக்கள் வராமல் இருக்கவும், தசைகள் பளபளப்பாக இருக்கவும், தேமல் வராமல் இருக்கவும் என்ன யோகப் பயிற்சிகள் செய்யவேண்டும் ?

உடல் அதிக உஷ்ணம் காரணமாகவும், அதிக சிந்தனை, தூக்கமின்மை, அஜீரணம், மலச்சிக்கல், நாம் எடுக்கும் தகாத உணவு காரணமாகத்தான் பருக்கள் வருகின்றது.  இதற்கு வருண முத்திரை, சூரிய முத்திரை, மாதங்கி முத்திரை தினமும் காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்ய வேண்டும்.  இரண்டு நிமிடம் பயிற்சி செய்தால் போதும்.  உணவில் ஒரு ஒழுக்கத்தை கடைபிடிக்கவும்.  அதிக காரம், புளிப்பு, உப்பு வேண்டாம்.  புலால் அதிகமாக உண்ணாதீர்கள். முடிந்த வரை கீரை வகைகள், பழங்கள், உலர்ந்த திராட்சை எடுத்துக் கொள்ளுங்கள்.


வருண முத்திரை (தோல் வியாதி நீங்கும்):

விரிப்பில் நிமிர்ந்து அமரவும், முதுகெலும்பு நேராக இருக்கட்டு ம்,  கண்களை மூடி பத்து வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும்.  பின் சுண்டுவிரல் பெருவிரல் நுனியை தொடவும்.  மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும்.  இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.  காலை மதியம் மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.


சூரிய முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும்  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி பத்து வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும்.  பின் மோதிர விரலை மடக்கி உள்ளங்கையில் படும்படி வைக்கவும்.  மோதிர விரலின் மையத்தில் கட்டை விரலை வைத்து இலேசாக  ஒரு அழுத்தும் கொடுக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கியிருக்கட்டும்.  இரண்டு கைகளிலும் செய்யவும்.  இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.  காலை, மதியம், மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.


மாதங்கி முத்திரை: விரிப்பில் நேராக அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  எல்லா கை விரல்களையும் சேர்க்கவும். நடுவிரல் மட்டும் படத்தில் உள்ளது போல் நேராக இருக்கட்டும்.  கைவிரல்களை வயிற்று பக்கத்தில், அதாவது வயிறுக்கு முன்பாக வைக்கவும். இரண்டு நிமிடங்கள் காலை, மதியம், மாலை பயிற்சி செய்யவும்.

மேற்குறிப்பிட்ட மூன்று முத்திரைகளையும் பயிலுங்கள். முகப்பரு, தோல் வியாதி வராமல் வாழலாம்.

பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)

63699 40440

pathanjaliyogam@gmail.com

Tags:    

Similar News