செய்திகள்
குருங்குளம் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

தஞ்சை அருகே கரும்புகளை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-12 10:58 GMT   |   Update On 2020-11-12 10:58 GMT
நிலுவைத் தொகை ரூ.27½ கோடியை வழங்க கோரி தஞ்சை அருகே விவசாயிகள் கரும்புகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர்கள் அர்ச்சுனன், வேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், கரும்புக்கு கட்டுப்படியான விலையாக டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். கடந்த 2015-16 மற்றும் 2016-17-ம் ஆண்டு அரவை பருவங்களில் மாநிலஅரசின் பரிந்துரை விலை டன்னுக்கு ரூ.450 வீதம் மொத்தம் ரூ.900 என ரூ.27½ கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

2019-20-ம் ஆண்டின் மாநிலஅரசின் ஊக்கத்தொகை டன்னுக்கு 137 ரூபாய் 50 காசை வழங்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தனியார் சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் அந்த ஆலைக்கு அரவைக்காக வழங்கப்பட்ட கரும்புகளை எல்லாம் இனிமேல் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கைகளில் கரும்புகளை ஏந்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை ரூ.27½ கோடி நிலுவைத் தொகையை வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 60 நாட்களில் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். ஆனால் 3 ஆண்டுகள் கடந்த நிலையில் கூட இதுவரை நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. உற்பத்தி செலவு, வாகன வாடகை உள்ளிட்டவை அதிகரித்துள்ள நிலையில் கரும்பு டன் ஒன்றிக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்குள் நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
Tags:    

Similar News