செய்திகள்
உலக சுகாதார நிறுவனம்

கொரோனா... இப்போதைக்கு ஓயாது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Published On 2021-04-13 05:36 GMT   |   Update On 2021-04-13 05:36 GMT
கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்றும் அது முடிவுக்குவர நீண்ட காலம் ஆகலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவா:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 1½ ஆண்டுக்கு மேல் நீடித்து வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இதனால் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தினசரி பாதிப்பு அதிகரித்தபடியே இருககிறது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது.

பின்னர் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு பாதிப்பு குறைய தொடங்கியது. மேலும் தடுப்பு மருந்துகளும் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால் கொரோனா விரைவில் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் வைரசின் தாக்கம் வேகமெடுத்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்றும் அது முடிவுக்குவர நீண்ட காலம் ஆகலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதாளோம் கூறியதாவது:-


கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் பல்வேறு நாடுகளில் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வழிகின்றன. பல நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக தொடர்ந்து பரவி வருகிறது. இளம் வயதினர் தங்களுக்கு தொற்று வராது என்று நம்புகின்றனர். ஆனால் அது தவறானது.

கொரோனா பரவல் குறித்து பல்வேறு குழப்பங்கள், சிகிச்சையில் உள்ள சிக்கல்களால் வைரஸ் முடிவுக்கு வர நீண்டகாலம் ஆகும்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்பது நமக்கு தெரியவந்துள்ள உண்மை என்றார்.

உலக சுகாதார அமைப்பின் உயர்அதிகாரி மரியாவான் கெர்கோவ் கூறும்போது, தொடர்ந்து 7 வாரமாக வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகளவில் கொரோனா தொற்று 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல் இறப்பு எண்ணிக்கை ஒரே வாரத்தில் 5 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என்றார்.

Tags:    

Similar News