லைஃப்ஸ்டைல்
குழந்தைகளை வளர்க்க உதவும் ‘பொம்மைக்கலை’

குழந்தைகளை வளர்க்க உதவும் ‘பொம்மைக்கலை’

Published On 2020-09-25 03:54 GMT   |   Update On 2020-09-25 03:54 GMT
குழந்தைகளை நாம் எவ்வளவுதான் அன்பாக கவனித்துக் கொண்டாலும், அவைகளோடு சேர்ந்து விளையாடினாலும், குழந்தைகள் தங்களைப் போன்ற குழந்தைகளோடு விளையாடுவதைத்தான் பெரிதும் விரும்புகின்றன.
பொம்மைகள் குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. குழந்தைகளுக்கு பிடித்த பொம்மைகள் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் சில உண்மைகளை கண்டறிந்திருக்கிறார்கள்.

குழந்தைகளை நாம் எவ்வளவுதான் அன்பாக கவனித்துக் கொண்டாலும், அவைகளோடு சேர்ந்து விளையாடினாலும், குழந்தைகள் தங்களைப் போன்ற குழந்தைகளோடு விளையாடுவதைத்தான் பெரிதும் விரும்புகின்றன. உடன் விளையாட குழந்தைகள் இல்லாத நேரத்தில் அந்த இடத்தை ‘டெடிபியர்’ போன்ற பொம்மைகள் பூர்த்தி செய்கின்றன.

அத்தகைய பொம்மைகள் எங்கிருந்தாலும் அவை குழந்தைகளை அப்படியே ஈர்த்துவிடும். அந்த பொம்மைகளை வாங்கித்தரும்படி கேட்பார் கள். வாங்கிக்கொடுத்துவிட்டால், அதனோடு இரண்டறக்கலந்து விளையாடத் தொடங்கி விடுவார்கள். அவற்றோடு பேசுவார்கள். விளை யாடுவார்கள். கட்டளையிடுவார்கள்.

மென்மையான பொம்மைகளை குழந்தைகள் தங்கள் நண்பர்களாக கருதுவது இயற்கையாகவே நடக்கும் விஷயமாகும். டெடிபியர் குட்டிக்கரடி பொம்மைகள் மனிதர்களைப் போல மென்மையாக இருப்பதால், அதை உயிருள்ள மனிதர்களாக பாவித்து குழந்தைகள் விளையாடுகிறார்கள். அவர்கள் மனதிலும் அது ஒரு பொம்மை என்ற எண்ணம் மாறி ஒரு சக நண்பர் என்ற உணர்வு பதிவாகிவிடும்.

குழந்தைகள் கையில் ஒரு பொம்மையிருந்தால், அவைகள் தனிமையை உணர்வதில்லை. தங்க ளோடு தங்களுக்கு பிடித்தமான நண்பர் இருப்பது போல் குழந்தைகள் உணர்கின்றன. குழந்தைகளை முதலில் மழலையர் பள்ளியில் சேர்ப்பார்கள். அப்போதுதான் குழந்தைகள் முதல்முறையாக பெற்றோரை பிரியும். அந்த பிரிவு தெரியாமல் இருக்கவும், தைரியமாக பிரிந்திருக்கவும் அப்போது குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப் பார்கள். அந்த பயிற்சியில் முக்கிய பங்காற்றுவது பொம்மைகள்தான். அப்போது அவர்கள் முன்னால் எத்தனை விளையாட்டு பொருட்களை கொட்டி னாலும் அவைகள் பொம்மைகளைத்தான் தேர்வு செய்யும். அது தனிமையை விரட்டுவதோடு, பாதுகாப்பையும் அளிக்கின்றன. அதோடு தன் கையில் கிடைப்பதை தூக்கி எறியவும், உடைத்து பார்க்கவும் குழந்தைகள் விரும்பும். பொம்மைகள் குழந்தைகளின் வேகம், முரட்டுத்தனம் போன்ற அனைத்துக்கும் ஈடுகொடுத்து அவர்களது மனநிலையை மேம்படுத்துகின்றன.

பொம்மைகள் மூலம் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தரலாம். அடம்பிடிக்கும் குழந்தைகளை பொம்மைகளால் இயல்புநிலைக்கு கொண்டுவர முடியும். ‘நீ சீக்கிரம் பால் குடிச்சிடு. நீ பால் குடித்தால் உன் பொம்மை சந்தோஷப்படும். விரைவாக குளிச்சி, டிரஸ் பண்ணிக்கோ! நீ சுத்தமாக இருந்தால்தான் உன் பொம்மைக்கு பிடிக்கும்’ என்றெல்லாம் கூறி, குழந்தைகளிடம் நல்ல பழக்க வழக்கங்களை கொண்டுவரலாம்.

பாதுகாப்பான, மென்மையான பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து, தினமும் ஒரு மணி நேரமாவது குழந்தைகளை அந்த பொம்மைகளோடு விளையாடவைக்க வேண்டும். அவர்கள் கற்பனைக்கேற்ப பொம்மைக்கு அண்ணன், தம்பி, பிரெண்ட் என்று பெயர் வைத்து விளை யாடுவார்கள். சில நேரம் பொம்மைகளை குழந்தைகளாகவும் அவர்களை அம்மாவாகவும் நினைத்து பொம்மைகளை மிரட்டுவார்கள். சாப்பிட வலியுறுத்துவார்கள்.

அப்படி குழந்தைகள், பொம்மையிடம் சாப்பாடு பற்றி பேசத்தொடங்கிவிட்டால் சாப்பாட்டின் அருமை அந்த குழந்தைக்கு புரிந்துவிட்டது என்று அர்த்தம்.

குழந்தைகளின் மனநிலை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. திடீரென்று அழும், சிடுசிடுப்பாகும், கோபப்படும். அதற்கான காரணம் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. அது போன்ற நேரங் களில் குழந்தைக்கும் நமக்கும் இடையே இந்த பொம்மைகள் செயல்பட்டு உண்மைகளை வெளிக்கொண்டுவந்துவிடும். தான் ஏன் கோபப்பட்டேன் என்பதை அதனோடு பேசும்விதமாக குழந்தைகள் வெளிப்படுத்துவார்கள். பொம்மைகளிடம் மனம்விட்டு பேசுவதால் குழந்தைகள் மனது லேசாகி விடும். அதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் விலகும்.

குழந்தைகள் தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங் களை தங்கள் வயது குழந்தைகளோடு பகிர்ந்து கொள்ளும். தனது தோழிக்கான இடத்தில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு அதனிடம் தனது மனதில் இருப்பவைகளை வெளிப்படுத்தும். பள்ளியில் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த விஷயங்கள், பெற்றோர் சொல்லிக் கொடுத்த விஷயங்களை எல்லாம் பொம்மைகளிடம் பேசும். அப்போது பெற்றோர் கவனித்தால், தவறுகளை திருத்தலாம். உச்சரிப்புகளை சரிசெய்யலாம். பள்ளியில் கற்றுத்தந்த ரைம்ஸ்களை பொம்மைகளுக்கு கற்றுத்தரச் சொல்லுங்கள். குழந்தைகள் பாட முயற்சிக்கும்போது வார்த்தைகளை எடுத்துக் கொடுத்து உற்சாகப்படுத்துங்கள். இவ்வாறு செய்தால் குழந்தைகளிடம் பேச்சுத்திறன் வளரும். பொம்மைகளோடு பேசி, விளையாடும் குழந்தைகள் விரைவாகவே நன்றாக பேச தொடங்கிவிடும்.

குழந்தைகளிடம் பகிர்ந்தளிக்கும் தன்மை வளர வேண்டும். அந்த நல்ல வழக்கத்தை பொம்மைகள் மூலம் ஏற்படுத்தலாம். தான் சாப்பிடும் பொருளை பொம்மைக்கும் கொஞ்சம் கொடுத்து சாப்பிடு என்று கூறி, பகிர்ந்து உண்ணும் பக்குவத்தை குழந்தைகளிடம் வளர்க்கவேண்டும்.

தற்போது பெரும்பாலான வீடுகளில் ஒரே குழந்தைதான் இருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால்தான் பகிர்ந்து உண்ணும் பழக்கம் அவைகளுக்கு ஏற்படும். அந்த பண்பை பொம்மைகள் மூலம் ஏற்படுத்த லாம்.

சாதாரணமாகவே பொம்மைகளை பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்ளும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்ளவும் செய்யும். தவறி கீழே விழுந்து விட்டால் பதறி துடித்து அதை எடுத்து சமாதானப் படுத்தும் இயல்பும் குழந்தைகளிடம் உண்டு. இப்படி கவனிப்பு, உபசரிப்பு, பகிர்வு போன்ற பண்புகளை பொம்மைகள் குழந்தைகளுக்கு கற்றுத் தருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
Tags:    

Similar News