வழிபாடு
சபரிமலையில் சாமி தரிசனத்துக்காக காத்து இருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகளை அனுமதிக்க கோரிக்கை

Published On 2021-12-04 03:58 GMT   |   Update On 2021-12-04 03:58 GMT
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகளை அனுமதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைவர் கே.அனந்தகோபன் நேற்று சபரிமலையில் ஆய்வு செய்தார். தொடர்ந்து சன்னிதானத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா கட்டுப்பாடுகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்ட போதிலும் முற்றிலுமாக தளர்த்தப்பட வில்லை. இந்த நிலையில் ஐயப்ப பக்தர்களின் வருகையினை அதிகரிக்கும் வகையில் ஆன்லைன் முன் பதிவு தரிசன முறையை நீக்கி விட்டு, ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வருபவர்கள் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு நேரடி தரிசனம் அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

மேலும் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு பின் சன்னிதானத்தில் ஓய்வு எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பக்தர்களின் வருகை குறைய காரணமாக தேவஸ்தானம் கருதுகிறது. இந்த நிலையில் சபரிமலையில் தங்குவதற்கான அறைகளை சுத்தம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது

மொத்தம் உள்ள 500 அறைகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட அறைகள் தங்குவதற்கு ஏற்றவாறு தயார் நிலையில் உள்ளது. அரசு அனுமதி அளித்தால் அதற்கான முன் பதிவு உடனடியாக தொடங்கப்படும். இது தொடர்பாக அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

அதேபோல் பக்தர்கள் பம்பை ஆற்றில் நீராடவும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு முந்தைய காலங்களைப்போல் நெய் அபிஷேகத்தை பக்தர்கள் நேரிடையாக நடத்தவும் அனுமதிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதி உடனடியா கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது செயல் அதிகாரி கிருஷ்ணகுமார வாரியர் உடன் இருந்தார்.
Tags:    

Similar News