உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவை வெல்லும் சித்த மருத்துவம்

Published On 2022-01-11 12:00 GMT   |   Update On 2022-01-11 12:04 GMT
கொரோனா 3-வது அலையை கண்டும் மக்கள் அச்சப்பட வேண்டியது இல்லை. கொரோனா எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை வெல்லும் பேராயுதமாக சித்த மருந்துகள் உள்ளன என்கிறார்கள் சித்தா மற்றும் இயற்கை மருத்துவர்கள்.


கொரோனா முதல் மற்றும் 2-வது அலையின் போது நோய் தொற்றை கட்டுப்படுத்த பெரிதும் கைகொடுத்தவை சித்த மருந்துகளே என்று கூறினால் அது மிகையாகாது.

அந்த அளவுக்கு கொரோனா வைரசை விரட்டுவதில் இயற்கை முறை மருந்துகளான சித்த மருந்துகள் மிகுந்த பலனை அளித்தன. இதனால் தமிழகத்தில் கொரோனா முதல் அலை மற்றும் 2-வது அலை தாக்கத்தின் போது சித்த மருத்துவ மையங்கள் அதிகம் செயல்பட்டன. கொரோனா நோயாளிகள் இந்த மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர். எந்த விதமான பக்க விளைவுகளுமின்றி கொரோனா நோயாளிகளை சித்த மருத்துவர்கள் காப்பாற்றினார்கள்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி சார்பில் ஏற்படுத்தப்பட்ட சித்த மருத்துவ மையங்களில் ஆயிரக்கணக்கானோர் குணம் அடைந்து, சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறினார்கள். இதனால் கொரோனா நோயாளிகளில் பலர் இப்போதும் சித்த மருந்துகளை நாடிச்செல்லும் நிலை காணப்படுகிறது.

3-வது அலையாக ‘ஒமைக்ரான்’ ரூபத்தில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவை முற்றிலுமாக விரட்ட என்ன செய்யலாம்? என்கிற கேள்விக்கு இதுவரை யாரிமும் விடை இல்லை. இதனால் வருமுன் காக்கும் வழிமுறைகளை அரசாங்கங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. வந்த பின் எப்படி காத்துக் கொள்வது? என பலர் இப்போதும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு மதுரையில் குடும்பத்தோடு வி‌ஷம் குடித்து 2 பேர் பலியான சம்பவமே இதற்கு உதாரணமாகும். ஆனால் சித்த மருத்துவர்களோ... அன்றும் சரி... இன்றும் சரி... கொரோனாவை கண்டு பயப்பட வேண்டாம் என்பதை கொஞ்சம் வலுவாகவே கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் கொரோனா 3-வது அலையை கண்டும் மக்கள் அச்சப்பட வேண்டியது இல்லை. கொரோனா எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை வெல்லும் பேராயுதமாக சித்த மருந்துகள் உள்ளன என்கிறார்கள் சித்தா மற்றும் இயற்கை மருத்துவர்கள்.

இதுதொடர்பாக சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவ கல்லூரியின் விரிவுரையாளரான டாக்டர் சாய் சதீஷ் கூறும்போது, ‘‘ஒமைக்ரான் வடிவில் வந்துள்ள கொரோனா தொற்றையும் விரட்டும் சக்தி படைத்தவையாக சித்த மருந்துகள் திகழ்கின்றன. 2-வது அலையில் டெல்டா வகை கொரோனா பாதிப்பில் பலருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இதனால் மூச்சு விடுவதற்கு பலரும் சிரமப்பட்டனர். அப்போது அவர்களுக்கு பிராணயாமம் கை கொடுத்தது. தற்போது ஒமைக்ரான் வகை தொற்று அதிகரித்து வரும் நிலையில் தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை அதற்கான அறிகுறிகளாக உள்ளன. கொரோனா அறிகுறி ஏற்பட்டவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான சித்த மருந்துகளை உட்கொண்டால் போதும்’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகள் அதில் இருந்து எளிதில் மீண்டு வருவதற்காக அவர்களுக்கு இயற்கை உணவுகள் வழங்கப்படுகிறது.

மூலிகை பானங்களுடன், நவதானியம் மற்றும் சிறு தானிய வகைகள் உணவாக கொடுக்கப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கவும், வந்த பின்னர் அதனை விரட்டியடிக்கவும் சித்த மருந்துகள் வெகுவாக கை கொடுக்கின்றன.

இந்த கொரோனா காலத்தில் நில வேம்பு குடிநீரையோ, மரமஞ்சள் நீரையோ தொடர்ந்து 10 நாட்கள் குடிக்கலாம். இதன் பின்னர் வாரத்துக்கு 3 முறை எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அதேபோன்று முன் எச்சரிக்கையாக தாளிசாதி வடாகம், திப்பிலி ரசாயனம், ஆடாதொடை மணப்பாகு, மரமஞ்சள் குடிநீர் போன்ற வற்றையும் தடுப்பு மருந்துகளாக உட்கொள்ளலாம் என இயற்கை சித்த மருத்துவர்கள் வழிகாட்டுகிறார்கள்.

கொரோனா பரவ தொடங்கிய போது நாம் கடைபிடித்த பழக்க வழக்கங்களை மீண்டும் தினமும் கடைபிடிக்க வேண்டும். உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பது நல்ல பலனை தரும். ஆவி பிடிப்பதும் சளி தொல்லையில் இருந்து விடுபட வழிவகுக்கும்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பலர், நாம் தான் தடுப்பூசி போட்டு விட்டோமே நமக்கு கொரோனா வராது என்று அலட்சியமாக இருக்கிறார்கள். அப்படி இருக்காமல் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சித்த மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று தேவையான தடுப்பு மருந்துகளை முன்கூட்டியே எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் கொரோனா வந்தவர்கள் பீதி அடையாமல் தொடக்கத்திலேயே சித்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் எப்பேர்ப்பட்ட கொரோனாவையும் வெல்ல முடியும் என நம்பிக்கையோடு கூறுகிறார்கள் சித்த மருத்துவர்கள்.

எனவே கொரோனாவை கண்டு பயப்படாதீர்கள். அதனை எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். எனவே சித்த மருந்துகளும் சிறந்த வழிகாட்டுதலாக உள்ளன.

Tags:    

Similar News