செய்திகள்
புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, துண்டு பிரசுரங்களை வழங்கிய காட்சி.

பட்டம் விட்டால் சட்டம் பாயும்- புளியந்தோப்பு போலீஸ் அதிரடி

Published On 2019-11-08 10:40 GMT   |   Update On 2019-11-08 10:40 GMT
மாஞ்சா கயிறு உயிரிழப்பை தடுக்க பட்டம் விடுவோர் மீதும் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று புளியந்தோப்பு போலீஸ் எச்சரிச்கை விடுத்துள்ளது.

சென்னை:

சென்னை கொருக்குப் பேட்டையில் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் 3 வயது சிறுவன் அபினேஸ்வரன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜசேகரன் மாஞ்சா கயிறு அறுத்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் புளியந்தோப்பு போலீசார் இன்று மாஞ்சா கயிறு மரணங்களை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். ‘பட்டம் விட்டால் சட்டம் பாயும்’ என்கிற எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய 1000 துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வினியோகம் செய்தனர்.

துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-

பட்டம் விடுவதால் சிறுவர்களின் படிப்பு மற்றும் கவனம் திசை திரும்புகிறது. இதனால் படிப்பு பாதிக்கிறது.

பிள்ளைகளை பட்டம் விடாமல் கவனித்துக் கொள்வது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும்.

பட்டம் விடுவதால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது.

பட்டம் விடும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.

சிறுவர்கள் பட்டம் விட்டால் அதற்கு பெற்றோரும் பொறுப்பாவர்.

பட்டம் மற்றும் மாஞ்சா கயிறு வியாபாரம் செய்யும் கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்யும் நபர்களை கண்டறிந்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பட்டம் விடும் நபர்கள் மற்றும் கடைகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

யாராவது பட்டம் விட்டால் பொதுமக்கள் புளியந்தோப்பு போலீஸ் நிலையத்திற்கோ அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ 23452377, 23452520 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News