ஆன்மிகம்
சனிபகவான்

குச்சனூர், தஞ்சாவூர் கோவில்களில் நாளை சனிப்பெயர்ச்சி விழா

Published On 2020-12-26 09:11 GMT   |   Update On 2020-12-26 09:11 GMT
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. நாளை (27-ந் தேதி) அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.
புதுவை மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற சனி பகவான் கோவில் உள்ளது. இங்கு நாளை (27-ந் தேதி) அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

இதையொட்டி ஐகோர்ட்டு உத்தரவுபடி கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோவில் நிர்வாகம் விழா ஏற்பாடு செய்துள்ளது.

ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் முககசவம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தை கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். நளன் குளத்தில் நீராட அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதுதவிர தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது.

தேனி மாவட்டம் குச்சனூர் சுரபி நதிக்கரையில் சனீஸ்வரபகவான் சுயம்புவாக எழுந்தருளிய கோவில் உள்ளது. இங்கு நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதை குறுகலாக இருப்பதால் சீலையம்பட்டியில் இருந்து குச்சனூருக்கு பாலம் வழியாக வர தடை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால் பக்தர்கள் நீராடுவதற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பழனி முருகன் கோவிலின் உப கோவிலான திருஆவினன்குடி கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இதற்காக காலை 4.30 மணி முதல் சிறப்பு பூஜைகள், யாக பூஜை நடத்தப்படுகிறது. இதில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 6 மணிக்கு பிறகு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வந்து சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஏரிக்குப்பத்தில் எந்திர வடிவிலான சனீஸ்வரர் கோவில் உள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

இதனால் இந்த கோவிலில் நாளை நடைபெறும் 
சனிப்பெயர்ச்சி
 விழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

சனி பகவான் பெயர்ச்சியாகும் நேரமான அதிகாலை 5.22 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் இந்த கோவில் குளத்தில் நீராடுவதற்கும், கோவிலின் உள்ளே விளக்கு ஏற்றி வழிபடுவதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

தஞ்சை மேலவீதி சங்கரநாராயணர் கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சியையொட்டி சனிபகவானுக்கு சிறப்பு எண்ணை மற்றும் பால் அபிஷேகம் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு சனிப் பெயர்ச்சி விழாவின் போதும் இக்கோவிலில் உள்ள சனிபகவானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று சனிபகவான் நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக இக்கோவிலில் இந்த சனிப்பெயர்ச்சி விழா குறைந்த அளவிலான பக்தர்களுடன் சிறப்பு அபிஷேகம் மட்டுமே நடத்தப்பட உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News