செய்திகள்
கோப்புப்படம்

காந்தி ஜெயந்தியையொட்டி மதுக்கடைக்கு பதிலாக இனிப்பு கடைக்கு சீல் வைப்பு

Published On 2020-10-02 23:12 GMT   |   Update On 2020-10-02 23:12 GMT
கோலார் தங்கவயலில் காந்தி ஜெயந்தியையொட்டி கலால் துறை ஊழியர்கள் மதுக்கடைக்கு சீல் வைப்பதற்கு பதிலாக இனிப்பு கடைக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கோலார் தங்கவயல்:

இந்தியாவில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி அன்று மதுக்கடைகள், இறைச்சிக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அதுபோல் காந்திஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் இரவு கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் மதுக்கடைகளை கலால் துறையினர் மூடி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதுபோல் பஸ் நிலையம் அருகில் உள்ள லிட்டில் பிளவர் மதுக்கடைக்கு சீல் வைக்க கலால் துறை ஊழியர்கள் சென்றுள்ளனர்.

ஆனால் தவறுதலாக அவர்கள், அருகில் உள்ள ஷாமா என்ற இனிப்பு கடையின் பூட்டை சீல் வைத்துவிட்டு சென்றுள்ளனர். நேற்று காலை வழக்கம் போல் இனிப்பு கடையை திறக்க அதன் உரிமையாளர் வந்த போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கலால் துறையினரின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்திருப்பதாக கடை உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளார். சம்பவம் பற்றி தகவல் அறிந்த கலால் துறையினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் இனிப்பு கடைக்கு வைத்த சீலை அகற்றினர். மேலும் அருகில் உள்ள மதுக்கடையின் பூட்டை சீல் வைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
Tags:    

Similar News