உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் கடை

2 நாட்கள் சரக்கு கிடைக்காது- டாஸ்மாக் கடைகளில் கடும் கூட்டம்

Published On 2022-01-13 06:27 GMT   |   Update On 2022-01-13 06:27 GMT
மதுக்கடைகள் அடைக்கப்பட்டாலும் விற்பனை சரிவு ஏற்படாத வகையில் அதிகளவு விற்பனை செய்ய டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:

பொங்கல் பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மதுக்கடைகளில் அமோக மது விற்பனை நடைபெறும். வழக்கமாக பொங்கலுக்கு மறுநாள் (15-ந்தேதி) திருவள்ளுவர் தினம் கடை பிடிக்கப்படுவதால் அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும்.

இந்த ஆண்டு பண்டிகை நாட்களுடன் கொரோனா முழு ஊரடங்கு (ஞாயிற்றுக்கிழமை) பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் 2 நாட்கள் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

15 மற்றும் 16 ஆகிய இருநாட்கள் தொடர்ந்து மதுக்கடைகள் மூடப்படுவதால் மதுபிரியர்கள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இன்றும், நாளையும் மட்டுமே மதுக்கடைகள் செயல்படுகிறது. அதன் பின்னர் 2 நாட்கள் மூடப்படுவதால் மதுபானங்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள மதுபிரியர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்ற அதே வேளையில் மதுபானங்களையும் அதிகளவு வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் இன்று கூட்டம் அலைமோதியது.

நாளை இரவு 10 மணியுடன் கடைகள் மூடப்படுவதால் அதற்குள்ளாக மதுபானங்களை அதிகளவு வாங்கி விசே‌ஷ நாட்களை கொண்டாட தீர்மானித்துள்ளனர். இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் மற்றும் கிராமப்பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவியத் தொடங்கியது.

மதியம் 12 மணிக்கு கடை திறப்பதற்கு முன்னதாகவே மதுபிரியர்கள் கூட்டம் திரண்டு நின்றது. இந்த 2 நாட்களும் அதிகளவு மது விற்பனையாகும் என்பதால் கடைகளில் அதிகளவு இருப்பு வைக்கப்படுகிறது.

எல்லா டாஸ்மாக் கடைகளிலும் இன்று மதுபானங்கள் குவிக்கப்படுகின்றன. எந்த வகை மதுபானங்களும் இல்லை என்று சொல்லாத அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மதுக்கடைகள் அடைக்கப்பட்டாலும் விற்பனை சரிவு ஏற்படாத வகையில் அதிகளவு விற்பனை செய்ய டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெறும். இந்த ஆண்டு அதை விட கூடுதலாக விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மதுபான குடோன்களில் இருந்து கடைகளுக்கு இன்று பிற்பகல் முதல் சரக்குகள் அதிகளவு இருப்பு வைக்கப்படுகிறது. மேலும் மதுபிரியர்கள் மொத்தமாக கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால் பெட்டி பெட்டியாக ஒரு சிலர் மதுபானங்களை வாங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வருகிற 18-ந் தேதி தைப்பூசம் தினத்திலும் 26-ந் தேதி குடியரசு தினத்திலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.


Tags:    

Similar News