செய்திகள்
அல்பேனிய வெளியுறவுத் துறை மந்திரி கென்ட் ககாஜ்.

அல்பேனியாவில் இருந்து 2 ஈரானிய தூதர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு

Published On 2020-01-16 05:09 GMT   |   Update On 2020-01-16 05:09 GMT
அல்பேனியாவில் இருந்து 2 ஈரானிய தூதர்கள் உடனடியாக வெளியேறும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
திரானா:

ஐரோப்பாவின் தென்கிழக்கில் உள்ள அல்பேனியா நாட்டில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளின் செயல்பாடுகளை அந்நாட்டு அரசு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதில், இரண்டு அதிகாரிகளின் செயல், விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்டதால், அவர்களை தடை செய்யப்பட்ட நபராக அறிவிக்க அல்பேனிய அரசு முடிவு செய்தது. 

இது தொடர்பாக அந்நாட்டின் ஐரோப்பிய விவகாரம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வியன்னா மாநாட்டின் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டதால், ஈரான் தூதரக அதிகாரிகள் முகமது அலி அர்ஸ் பீமானேமதி மற்றும் சையத் அஹ்மத் ஹொசைனி அலஸ்த் ஆகிய இரண்டு பேரும், அல்பேனியாவில் தொடர்ந்து தங்கியிருக்கும் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஈரான் தூதர்கள் இரண்டு பேரும் உடனடியாக அல்பேனியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை மந்திரி கென்ட் ககாஜ் தனது பேஸ்புக் பக்கத்திலும் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேற்கொண்டு எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. 

இதேபோல் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக ஈரானிய தூதர்கள் இரண்டு பேரை அல்பேனியா அரசு வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News