ஆன்மிகம்
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது எப்படி?

Published On 2019-12-10 08:29 GMT   |   Update On 2019-12-10 08:29 GMT
உலகத்திற்கு ஒளிக்கொடுக்கும் தீபமாக இந்த கார்த்திகை தீபம் கருதப்படுகிறது. கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதில் பல்வேறு ஐதீகங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம் உலகப்புகழ் பெற்றது. உலகத்திற்கு ஒளிக்கொடுக்கும் தீபமாக இந்த கார்த்திகை தீபம் கருதப்படுகிறது. கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதில் பல்வேறு ஐதீகங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு கார்த்திகை தீபம் இன்று ஏற்றப்பட உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றுவார்கள். மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும்.

பரணி தீபம் என்பது நமக்கு பொன், பொருள், ஆஸ்தி, அந்தஸ்து உள்பட அனைத்து வகை செல்வங்களையும் தரக்கூடியது. இந்த பிறவிக்கு தேவையான அனைத்து வகை செல்வங்களையும் பரணி தீபம் தரும்.

ஆனால் மகாதீபம் என்பது மோட்சத்தை தரக்கூடியது. பிறவி பிணி நீங்கி வீடுபேறு பெறவேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவரும் மகாதீபத்தை நேரில் கண்டு வழிபடவேண்டும்.

இத்தகைய சிறப்பான இந்த இரு தீபங்களும் திருவண்ணாமலை தலத்தில் எப்படி ஏற்றப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
கார்த்திகை தீபத்தன்று அதிகாலை 3 மணிக்கெல்லாம் நடை திறந்துவிடுவார்கள். முதலில் கருவறை அண்ணாமலையார் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும். பிறகு கருவறை முன்புள்ள பிரதோஷச மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

பரணி நட்சத்திர நேரத்தில் இந்த தீபம் ஏற்றப்படுவதால் இதற்கு பரணி தீபம் என்று பெயர். இதற்காக அந்த மண்டபத்தில் ஹோமம் வளர்க்கப்படும். அதில் இருந்து ஒரு தீபம் ஏற்றப்படும். பிறகு அந்த தீபத்தில் இருந்து ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றுவார்கள்.

சிவபெருமான் ஐந்து தொழில்களை செய்பவர் என்பதை குறிக்கும் வகையில் ஐந்துமுகங்கள் கொண்டவர் என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஐந்து மடக்கு தீபங்கள் இருக்கும். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க இந்த தீபம் ஏற்றப்படும். அதன்பிறகு கருவறை லிங்கத்திற்கு நிறைய கற்பூரங்கள் வைத்து தீபம் காட்டப்படும். அந்த தீபத்தை பிரதோஷ மண்டபத்திற்கு கொண்டு வருவார்கள். ஐந்து மடக்குகளில் உள்ள தீபத்திற்கு கற்பூர ஆரத்தி காட்டப்படும்.
பிறகு அந்த பஞ்சமுக தீபத்தை இரண்டாவது பிரகாரம் வழியாக எடுத்து வந்து உண்ணாமலையம்மன் சன்னதிக்கு செல்லும் வாசல் வழியாக வந்து மலையை நோக்கி காண்பிப்பார்கள்.

இதைதொடர்ந்து பஞ்சமுக தீபங்களில் ஒரு தீபம் உண்ணாமலையம்மன் சன்னதியில் வைக்கப்படும். அந்த தீபத்தில் இருந்து சாந்திகலா, சாந்ததீத கலா, வித்தியாகலா, பிரதிஷ்டா கலா, நிவர்த்திகலா என்ற ஐந்து முக தீபங்கள் ஏற்றப்படும். அதன்பிறகு விநாயகர் முதல் சொர்ணபைரவர் சன்னதி வரை தீபங்கள் கொண்டு சென்று வைக்கப்படும்.

இதைத்தொடர்ந்து பிரம்ம தீர்த்தத்தில் அன்று பகல் தீர்த்தவாரி நடைபெறும். 11 மணி அளவில் பருவத ராஜக்குலத்தை சேர்ந்தவர்கள் ஆலயத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு ஆலய அலுவலகத்தில் மாலை அணிவித்து சிறப்புகள் செய்யப்படும். இதற்கிடையே ஏற்கனவே சன்னதிகளில் வைத்த தீபங்கள் ஒன்றாக சேர்க்கப்படும். அதை எடுத்து வந்து தயார்நிலையில் வைத்திருப்பார்கள்.

அந்த தீபம் பருவத ராஜகுல பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும். அதை அவர்கள் மலைக்கு எடுத்து செல்வார்கள். சுமார் 3 மணி நேர நடைபயணத்திற்கு பிறகு அவர்கள் மலை உச்சிக்கு சென்று அடைவார்கள். மலை உச்சியில் ஏற்கனவே பிரம்மாண்ட தீப கொப்பரை தயார் நிலையில் இருக்கும்.

நெய் ஊற்றி கடாதுணி சுற்றிவைக்கப்பட்டு தீபம் ஏற்றவதற்கு தயார்நிலையில் அது வைக்கப்பட்டிருக்கும். அங்கு சென்று பருவத ராஜகுல பிரதிநிதிகள் தீபம் ஏற்றும் பணிகளை தொடங்குவார்கள். 5 மணிக்கெல்லாம் அவர்கள் தீபம் ஏற்றுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தயாராக இருப்பார்கள்.
இந்தநிலையில் அண்ணாமலையார் ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தொடங்கும். ஐந்து மணிக்கு பிறகு பஞ்ச மூர்த்திகள் ஒவ்வொருவராக ஆலயத்திற்குள் இருந்து வெளியில் வரதொடங்குவார்கள். அதாவது திருவண்ணாமலை ஆலயத்தில் 2-வது பிரகாரத்தில் இருந்து 3-வது பிரகாரத்திற்கு வருவார்கள். 3-வது பிரகாரம் நல்ல விசாலமானது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த பிரகாரத்தில் அமர முடியும். அந்த பிரகாரத்தில் சுற்றுச்சுவர்களின் மேல் நூற்றுக்கணக்கானவர்கள் அமரக்கூடிய வசதி உடையது. அந்த பிரகாரத்தின் மையப்பகுதியில் மங்கையர்கரசி மண்டபம் உள்ளது. மங்கையர்கரசி கட்டியதால் அந்த மண்டபத்திற்கு அந்த பெயர் வந்துள்ளது. இந்த மண்டபத்தை தீபத்தரிசன மண்டபம் என்றும் சொல்வார்கள்.

இந்த மண்டபத்தில் இருந்து பார்த்தால் மலை உச்சி நல்ல தெளிவாக தெரியும். இந்த மண்டபத்திற்கு தான் பஞ்ச மூர்த்திகளும் அணிவகுத்து வருவார்கள். பஞ்ச மூர்த்தி என்பவர்கள் விநாயகர், முருகர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து பேர்களை குறிக்கும். முதலில் தங்க வாகனத்தில் விநாயகர் வருவார். அவரை தொடர்ந்து தங்க வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்து அருள்வார். அதன்பிறகு அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்பாளும் வருவார்கள். இறுதியில் வாகனத்தில் சண்டிகேஸ்வரர் வருகை தருவார். பஞ்ச மூர்த்திகள் ஐந்து பேரும் மலையை பார்க்கும் வகையில் அந்த மண்டபத்தில் வரிசையாக அமர வைக்கப்படுவார்கள்.

சுமார் 5.58 மணிக்கு 2-ம் பிரகாரத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் துள்ளாட்டம் போட்டப்படி வெளியில் வருவார். ஆண்டுக்கு ஒரு தடவை தீபத்தினத்தன்று மட்டுமே இவர் வெளியில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் வெளியில் வரும்போதே மலையை பார்த்தப்படி வருவார். பிறகு பஞ்ச மூர்த்திகளுக்கும் காட்சிக்கொடுப்பார். 2 நிமிடம் தான் அவர் வெளியில் இருப்பார். பிறகு அவர் உள்ளே சென்றுவிடுவார். சிவனும்- சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை அவர் உணர்த்திவிட்டு சென்றதும் அகண்ட தீபத்தில் இருந்து தீபம் ஏற்றி மலை உச்சியை நோக்கி காட்டுவார்கள்.

எலாய் என்ற தீபம் மூலம் மலை உச்சிக்கு சிக்னல் காட்டப்படும். எலாய் என்பது வட்ட வடிவில் இருக்கும் தீபமாகும். சுமார் 11 எலாய் தீபம் தயாராக வைத்து இருப்பார்கள். அந்த எலாய் தீபங்களை அப்படியும், இப்படியுமாக அசைத்து காட்டுவார்கள்.

ஆலயத்திற்குள் இருந்து சிக்னல் காட்டப்பட்டதும் மலை உச்சியில் சரியாக 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். பருவத ராஜகுலத்தை சேர்ந்தவர்கள் அந்த மகா தீபத்தை ஏற்றுவார்கள். இதற்காக திருண்ணாமலையில் பருவத ராஜகுலத்தை சேர்ந்த குடும்பத்தினர் உள்ளனர். அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மகாதீபத்தை ஏற்றுவது குறிப்பிடத்தக்கது.

மகாதீபம் ஏற்றப்பட்டதும் திருவண்ணாமலையில் திரண்டு இருக்கும் லட்சக்கணக்க மக்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா... உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா... என்று விண்அதிர கோஷம் எழுப்புவார்கள். அந்த சமயத்தில் ஆலயத் தின் ஒரு பகுதியில் வான வேடிக்கைகள் நடத்தப்படும். ஆலயம் முழுவதும் மின்சார அலங்கார விளக்குகள் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் எரிய தொடங்கும்.

ஆலயத்தில் உள்ள 9 கோபுரங்கள் கணக்கில் அடங்காத சன்னதிகள், மண்டபங்கள், 30 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவர்கள் என திரும்பிய திசையெல்லாம் மின்சார அலங்கார விளக்குகள் திருவண்ணாமலை தலத்தை சொர்க்க புரிபோல் மாற்றி இருக்கும்.

அந்த புத்துணர்ச்சியுடன் மலை உச்சியில் எரியும் மகாதீபத்தை கண்டு பக்தர்கள் வழிபடுவார்கள். அதோடு திருவண்ணாமலை முழுக்க ஆங்காங்கே தெருக்களிலும், சாலையோரங்களிலும் பக்தர்கள் சிறு சிறு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள். அதன்பிறகு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தை மேற்கொள்வார்கள். மகாதீபத்தை பார்த்து கும்பிட்டு கொண்டே கிரிவலம் வருவது என்பது தனி சுகமானது. அந்த சுகத்தை திருவண்ணாமலை தலத்தில் மட்டுமே அனுபவிக்க முடியும்.
Tags:    

Similar News