செய்திகள்
மதுரை ஐகோர்ட்

மினி கிளினிக்குகளில் ஏஜென்சி மூலம் பணி நியமனம் செல்லாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-01-22 01:12 GMT   |   Update On 2021-01-22 01:12 GMT
தமிழகத்தில் மினி கிளினிக்குகளில் ஏஜென்சி மூலம் பணி நியமனம் செல்லாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

தமிழகத்தில் மினிகிளினிக்குகளில் பணிபுரிய தனியார் ஏஜென்சி மூலம் மருத்துவப் பணியாளர்கள், நர்சுகள் தேர்வு செய்யப்படுவதை ரத்து செய்து, முறையாக பணியாளர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் என மதுரை வளர்நகரை சேர்ந்த வக்கீல் வைரம் சந்தோஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மினி கிளினிக் என்பது கொரோனா தொற்று காலத்திற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஏற்பாடு தான். அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணி நியமனம் என்பது மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும். ஆனால் மினி கிளினிக்குகளில் அவசர நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக பணியாளர்கள் நியமனம் செய்வது மட்டுமே. இவர்கள் பணி நியமனம் என்பது மத்திய சுகாதாரத்துறை இயக்ககம் பரிந்துரையின் அடிப்படையிலேயே குழு அமைத்து நடத்தப்படுகிறது என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில் மேற்கண்ட பணியாளர்கள் நியமனம் மாவட்ட சுகாதாரக்குழு மூலமாகவே நடைபெற வேண்டும். ஒருவேளை தனியார் நிறுவனங்கள் மூலமாக பணி நியமனங்கள் செய்யப்பட்டிருந்தால் அவை செல்லாது. தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் ஓராண்டுக்கு மேல் பணிபுரிய நேரிட்டால் அவர்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக பணி நியமனம் செய்து கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Tags:    

Similar News