செய்திகள்
கனிமொழி

வருகிற சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிக தொகுதி ஒதுக்க கட்சி தலைமையை வலியுறுத்துவேன் - கனிமொழி

Published On 2021-01-21 08:22 GMT   |   Update On 2021-01-21 08:22 GMT
வருகிற சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிக தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தலைமையை வலியுறுத்துவேன் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

திருவட்டார்:

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக கனிமொழி எம்.பி. மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

திருவட்டார் குமரன்குடி பகுதியில் முந்திரி தொழிலாளர்களுடன் கனிமொழி எம்.பி. கலந்துரையாடினார். இதை தொடர்ந்து மாத்தூர் தொட்டில் பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பேச்சிப்பாறையில் இருந்து படகில் தச்சமலை பகுதிக்கு சென்றார். அங்கு அவருக்கு பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்த கனிமொழி எம்.பி. கூறுகையில், காடுகளை பாதுகாப்பதில் உங்களுக்கு இருக்கும் அக்கறை வேறு யாருக்கும் இருக்க முடியாது. உங்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் செய்து தரப்படும்.

உங்களது கோரிக்கைகள் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறை வேற்றப்படும். தேர்தலுக்கு பிறகும் உங்களை சந்திக்க வருவேன் என்றார்.

கனிமொழி எம்.பி.க்கு பழங்குடியின மக்கள் நெற்றியில் திலகமிட்டு வரவேற்றனர். பழங்குடியினர் பாரம்பரிய முறைப்படி அங்குள்ள சிறுமிகள் அவரை வரவேற்று அழைத்து சென்றனர். இதை தொடர்ந்து ரப்பர் தோட்ட தொழிலாளர்களுடனும் கனிமொழி எம்.பி. பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டுமென்று விரும்புகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி மாற்றப்பட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை எதிர்நோக்கி உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை.

தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லவேண்டும். வேலை வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும். முதலீடு வர வேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மட்டுமே முடியும். அ.தி.மு.க. அரசுக்கு எதிராக பேசுபவர்களின் குரல்கள் ஒடுக்கப்படுகிறது.

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த தி.மு.க. தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. வருகிற சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிக தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தலைமையை வலியுறுத்துவேன்.

யார் கட்சி தொடங்கினாலும் தி.மு.க. வெற்றிக்கு பாதிப்பாக அமையாது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதன் மூலம் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டு வெற்றி பெற்றோம். தற்போது மக்கள் கிராமசபை கூட்டத்தின் மூலம் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News