ஆன்மிகம்
கோவிலில் பக்தர்கள் உருவ பொம்மைகளை வைத்து வினோத வழிபாடு நடத்திய காட்சி.

வனப்பகுதி கோவிலில் உருவபொம்மைகள் வைத்து பக்தர்கள் வினோத வழிபாடு

Published On 2021-01-16 03:04 GMT   |   Update On 2021-01-16 03:04 GMT
டி.என்.பாளையம் அருகே வனப்பகுதியில் உள்ள கோவிலில் உருவபொம்மைகள் வைத்து பக்தர்கள் வினோத வழிபாடு செய்தனர்.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த புஞ்சைதுறையம்பாளையம் வனப்பகுதியில் நவக்கிணறு மாதையன் (ஈஸ்வரன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் அன்று பக்தர்கள் பல்வேறு உருவபொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

அதேபோல் இந்த ஆண்டு மாட்டு பொங்கலான நேற்று டி.என்.பாளையம் சுற்று வட்டாரப்பகுதிகளான கொண்டையம்பாளையம், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், பங்களாப்புதூர், நஞ்சை புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற தவிறு பிள்ளை பொம்மை, காவல் நாய்பொம்மை, விநாயகர் பொம்மை, பசு பொம்மை என பல விதமான வண்ணங்கள் பூசப்பட்ட களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை கால்நடையாகவும், 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் வைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் எடுத்து சென்றனர்.

பின்னர் அந்த பொம்மைகளை மாதையனுக்கு படைத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுமாறும், நேர்த்திக்கடனை செலுத்தியும் வழிபட்டனர். இது குறித்து கோவிலின் பூசாரி முருகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனது முன்னோர்கள் உள்பட 3 தலைமுறைகளுக்கும் மேலாக இக்கோவிலில் பக்தர்கள் வழிபடுவது வழக்கம். ஒரு நாள் அவர்கள் லிங்கத்தை தலைசுமையாக எடுத்து கொண்டு கோவில் அருகே சென்றபோது தண்ணீர் தாகம் எடுத்தது. இதனால் கிணற்றில் நீர் அருந்த லிங்கத்தை ஒரு இடத்தில் வைத்துவிட்டு சென்று விட்டனர்.

தண்ணீர் அருந்திவிட்டு வந்து லிங்கத்தை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அதை எடுக்க முடியவில்லை. அப்படியே நிலத்தில் வேரூன்றி விட்டது. இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் புதிதாக கோவில் கட்டி, ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்துகின்றனர்.

கோவிலின் முகப்பு பகுதியில் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் எப்போதும் தண்ணீர் வற்றியதே கிடையாது. எனவே அந்த கிணற்றை நவக்கிணறு என அழைத்தனர். இது தவிர கோவிலின் நுழைவு பகுதியில் 30 அடியில் கிணறு ஒன்று உள்ளது. அதிலும் தண்ணீர் வற்றியது கிடையாது. மேலும் பக்தர்கள் எதை நினைத்து வேண்டுகின்றனரோ அவை நிறைவேறுகிறது.

இவ்வாறு கோவில் பூசாரி கூறினார்.
Tags:    

Similar News